முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் அணு உலை விவகாரம் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு வைகோ - சீமான் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, நவ. 14- கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் போராடும் மக்களுக்கு பதில் சொல்லாமல் அவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதா என்று மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அணுமின் நிலையம் பாதுகாப்பு அற்றது, கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள், மனித உயிர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தும், உடல் நலக் கேடுகள் வராமல் தடுப்பதற்கும், ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் உரிய நஷ்ட ஈடு வழங்குவதற்கும் தயாராக இல்லாத நிலையில், தங்களுக்குப் பேராபத்து ஏற்படும் என அஞ்சுகின்ற மக்களின் போராட்டம் சரியானதுதான்.

இந்திய மின்துறையின் முன்னாள் செயலர் சர்மா அவர்கள், அப்துல் கலாம் அவர்கள் கூறிய கருத்துகளுக்குக் கடுமையான மறுப்புத் தெரிவித்து, கூடங்குளம் அணுமின் நிலையம், முழுவதும் பாதுகாப்பானது என்பதை மறுத்து உள்ளார். இந்நிலையில், தங்கள் உயிர்களுக்கும், வருங்காலத் தலைமுறையினரின் உடல்நலனுக்கும், பேராபத்து நேரும் என்ற காரணத்தால், கூடங்குளம் வட்டாரத்தில் உள்ள, லட்சக்கணக்கான மக்கள், தங்களை வருத்திக்கொண்டு போராடுகின்றார்கள். பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள், தொடர்ந்து பட்டினிப்போரும் நடத்துகின்றார்கள். ஆனால், இந்தப் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில், அதில் ஈடுபட்டு உள்ளவர்களைக் களங்கப்படுத்தி, கொச்சைப்படுத்தி, பழிதூற்றும் எண்ணத்துடன், வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதல் என்று, அணுசக்தித்துறைத் தலைவர், ஒரு அக்கிரமமான குற்றச்சாட்டைச் சொன்னார். அது கிறித்துவ மிஷனரிகளின் பின்னதி என்று சிலர் நஞ்சைக் கக்கினார்கள். மத்திய அமைச்சர் நாராயணசாமி, போராட்டக்காரர்களுக்கு, எங்கிருந்தோ பணம் வருகின்றது; அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று கூறியிருப்பது, மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில், கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளை அடித்து, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்ததோடு,  அதற்கு புரோக்கர் வேலை பார்த்த வின்சட்டாவையும் வெளிநாட்டுக்குத் தப்ப வைத்த ஊழல் பேர்வழிகள், பங்குச்சந்தை ஊழல், தற்போதைய இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்களின் மூலமாக, உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் செய்த பேர்வழிகளாகப் பெயர் எடுத்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், நியாயமாகப் போராடுகின்ற மீனவ மக்களையும், தென் மாவட்ட மக்களையும், களங்கப்படுத்த முயல்கின்றனர். மக்கள் கோபத்தின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு, போராட்டத்தை நசுக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகின்றது. 

இவ்வாறு வைகோ தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் தங்களின் வாழ்வாதாரங்களுக்கு கேடானது என்று கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என விசாரணை நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பது போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அவமதிக்கும், மிரட்டும் செயலாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் அச்சத்தைப் போக்க உதவுவோம் என்று கூறி, பிரதமர் அமைத்த நிபுணர் குழு, போராட்டக் குழுவினருடன் ஒரே ஒருமுறை மட்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், போராட்டக்குழுவினரை மிரட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது ஏன்?   மத்திய அரசின் நிபுணர் குழுவிடம், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பாதுகாப்பு விவரங்கள் அனைத்தையும் அறிந்து மக்களுக்கு எடுத்துக் கூற, 60 வினாக்களை போராட்டக்குழுவினர் எழுப்பியுள்ளனர்.

இதற்கான பதிலை இந்திய அணு சக்தி ஆணையத்திடமிருந்து பெற்றுத் தருவோம் என்று மத்திய அரசின் நிபுணர் குழுவும் உறுதியளித்திருக்கிறது. இந்த நிலையில் நெல்லைக்கு வந்த நாராயணசாமி, போராட்டக்குழுவினர் கேட்ட முக்கியமான 6 கேள்விகளுக்கு மட்டுமே பதில் கூறுவோம் என்று கூறியுள்ளார். 2ஜி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் ஆகியவற்றில் அடித்த இரண்டு லட்சம் கோடி ஊழல் பணம் எங்கே போனது என்பதை மத்திய அரசு கண்டு பிடிக்கட்டும்.   அணு உலைகளுக்கு ஆதரவாக பேசுவோர், போராட்டம் நடத்துவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பேசும் உங்களுக்கு எந்த அணு உலை தயாரிப்பு நிறுவனம் பணம் தருகிறது? அதற்கெல்லாம் விசாரணை நடத்த தயாராக இருக்கிறாரா நாராயணசாமி? கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து போராடி வரும் மக்களை நேரில் சந்தித்துப் பேச திராணியற்ற மத்திய அமைச்சர், போராடும் மக்கள் மீதும், போராட்டக் குழுவினர் மீதும் அவதூறு பேசுவது, அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்தால் அணு உலையின் ஆபத்து வெட்ட வெளிச்சமாகி விடும் என்ற அச்சத்தினால்தான் என்பது புரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony