கடற்கொள்ளையர்களால் இந்தியர்கள் கடத்தல் - பா.ஜ.க. வெளிநடப்பு

புதன்கிழமை, 9 மார்ச் 2011      இந்தியா
Opposition

 

புதுடெல்லி, மார்ச் 10 - சோமாலிய கடற்கொள்ளையர்களால் இந்திய மாலுமிகள் சிலர் கடத்தப்பட்டது தொடர்பாக லோக்சபையில் பிரச்சனை கிளப்பிய பா.ஜ.க. எம்.பி.க்கள், அரசின் பதில் திருப்தி அளிக்காததால் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

பாராளுமன்றத்தின் லோக்சபையில் நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் எழுந்து சோமாலிய கடற்கொள்ளையர்களால் இந்திய மாலுமிகள் சிலர் கடத்தப்பட்ட விஷயம் குறித்து பிரச்சனை கிளப்பினார். இந்திய மாலுமிகள் அடிக்கடி சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். தற்போது கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என்பது குறித்து இந்த சபையில் அமைச்சர் தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் இந்த பிரச்சனை தொடர்பாக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தக் கூடாது என்றார். இதையடுத்து பவன்குமார் பன்சாலுக்கும் சுஷ்மா சுவராஜுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எழுந்து சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடியில் உள்ள இந்திய மாலுமிகளை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார். எகிப்தில் உள்ள இந்திய தூதரகம், துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் ஆகியவற்றுடன் தானே தொடர்புகொண்டு இதுகுறித்து பேசிவருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவுக்கான எகிப்பு தூதருடன் தான் பேசியதாகவும் இந்திய மாலுமிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்பதற்கு உதவ வேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டதாகவும் கிருஷ்ணா கூறினார். 

ஆனால் அமைச்சரின் இந்த பதிலில் திருப்தியடையாத பா.ஜ.க. எம்.பி.க்கள் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: