முக்கிய செய்திகள்

காங்கிரசுடன், கருணாநிதி நடத்திய கபட நாடகம்

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      தமிழகம்
Jaya1 3

 

சென்னை, மார்ச் 11 - ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சினைகளை பொதுமக்களும், மீடியாக்களும் மறக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி என்ற கபட நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியுள்ளார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்பலப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கபடநாடகம் நடந்து முடிந்தாகிவிட்டது.  இறுதியாக குட்டு வெளிப்பட்டுவிட்டது.  அனைவருக்கும் தெரியும் வண்ணம் உண்மை வெளிவந்துவிட்டது.  ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தை வெற்றிகரமாக தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட தி.மு.க.வும், காங்கிரசும் தங்களுக்குள் உள்ள வேறுபாட்டினை போக்கி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து ஓர் ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. தி.மு.க. ​ காங்கிரசுக்கு இடையே கடந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள் ஊடகங்களுக்கும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் வியப்பை அளித்து இருக்கலாம்.  தொகுதி எண்ணிக்கை தொடர்பான காங்கிரஸ் கோரிக்கை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அதிருப்தியை தெரிவித்தார்.  பின்னர், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தனது கட்சி அமைச்சர்கள் விலகிக் கொள்வதாக மிரட்டினார்.  ராஜினாமா கடிதங்களை கொடுக்கப் போகிறோம் என்ற பாசாங்கு நாடகத்தினை முன்னிறுத்தி, தி.மு.க. மத்திய அமைச்சர்கள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர்.  ஆனால், ராஜினாமாக் கடிதங்கள் அவர்களுடைய சட்டைப் பைகளிலிருந்து வெளி வரவில்லை.  இதற்குப் பதிலாக மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. ...  ஊடகங்களும், மக்களும் ஒரு முழு வாரத்திற்கு ஸ்பெக்ட்ரம் புலன் விசாரணையை மறக்கும் நிலைக்கு இந்த நடவடிக்கை தள்ளுவதாக அமைந்துவிட்டது. இது மட்டுமல்லாமல், விலைவாசி மற்றும் எண்ணிலடங்கா இதர பிரச்சினைகளை மறக்கும் நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.  அது தான் கருணாநிதியின் தந்திரம்!

இந்த கபட நாடகம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை.  மத்திய அமைச்சரவை 2009-​ல் அமைக்கப்படும் போதே இது போன்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டதை நாம் பார்த்து இருக்கிறோம்.  கருணாநிதி டெல்லிக்கு பறந்தார்.  தன்னுடைய கோரிக்கைகளை வைத்தார்.  கருணாநிதியின் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் தலைமை எதிர்ப்பு தெரிவித்தவுடன், கடுங்கோபம் கொள்வது போல் பாசாங்கு நடவடிக்கையில் ஈடுபட்டார். தனக்குள்ள மனக்கசப்பை வெளிப்படுத்தும் விதமாக, பாரதப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு, தனது கட்சியைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்களுடன் சென்னைக்குத் திரும்பினார் கருணாநிதி.  கருணாநிதியின் கபடநாடகம் அவருக்கு பலனைத் தந்தது.  தனது மகன் அழகிரி, பேரன் தயாநிதி மாறன், மகளின் மனம் கவர்ந்த ஆ. ராசா ஆகியோருக்கு வளமான இலாக்காக்கள் கிடைத்தன! இது போன்ற அச்சுறுத்தல் சம்பவம் அனைத்தும் வெறும் நாடகமே.  இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கினை கர்நாடகா தர மறுத்த போதும், முல்லைப் பெரியாறில் உச்ச நீnullதிமன்ற ஆணையை செயல்படுத்த கேரளா மறுத்த போதும், அனைத்துப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கு வழிவகுக்கின்ற பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு திரும்பத் திரும்ப உயர்த்திய போதும், தமிழக மீனவர்கள் நடுக் கடலில் படுகொலை செய்யப்பட்ட போதும், வறுமையில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட போதும், மத்திய அரசிலிருந்து விலகப் போகிறோம் என்று மத்திய அரசை கருணாநிதி மிரட்டவில்லை. வழக்கம் போல, பாரதப் பிரதமருக்கு கடிதங்களை அனுப்பினார். 

 தனது மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்களுக்கு வளம் கொழிக்கும் இலாக்காக்களை பெற வேண்டும் என்று விரும்பினாலோ, தேசத்தின் சொத்தை சுரண்டிய தனக்கு பிரியமானவர்களும், நெருக்கமானவர்களும் மத்திய புலனாய்வுத் துறையினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட போகிறார்கள் என்றாலோ,  வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லி வீராப்புடன் மத்திய அரசை மிரட்டுவார்.  காங்கிரஸ் தலைமையும் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்களை ஏமாற்றும் வகையில் தி.மு.க.வின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பது போன்று நாடகமாடும். பின்னர் இரண்டு ​ மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்காகத் தான் ஒரு வார கால போராட்டம் நடைபெற்றது என்ற தோற்றத்தை உருவாக்கி சரணடைந்து விடும்! காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிப்பது காங்கிரசுக்கு மிகப் பெரிய சங்கடம் ஆகும். உலகத்தின் மிகப் பெரிய ஊழலான ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழலை தலைமையேற்று நடத்தியவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா.  இந்த ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் சென்றடைந்த இடத்தை ஆராய்ந்தால், தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் வீட்டுக் கதவுகளை சென்று அடைகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு, கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது மாபெரும் முழக்கத்துடன் துவக்கப்பட்ட 2400 கோடி ரூபாய் மதிப்பிலான சேதுசமுத்திரத் திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை.  இந்தப் பணம் எல்லாம் தி.மு.க. தலைமைக்கு சென்று, மதுபானத் தொழிற்சாலைகள், வரியில்லாத கடைகள், விடுதிகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் இன்று முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றது.  தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது தனது செல்வாக்கினை பயன்படுத்தி, தன்னுடைய மூத்த சகோதரனின் வணிக சாம்ராஜ்யத்தில் அபரிமிதமான முதலீடுகள் சென்றடைவதை உறுதி செய்யக் காரணமாக இருந்தார்.  இந்த நிறுவனம், தொலைக்காட்சியை தாண்டி திரைப்படத் துறை, விமானத் துறை போன்றவற்றிலும் தற்போது விரிவடைந்து இருக்கிறது.  உச்ச நீnullதிமன்றத்தில் இருந்து கண்டனங்கள் வரக் காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய மத்திய கண்காணிப்புத் துறை ஆணையர் பி.ஜெ. தாமஸ் நியமனமும் தி.மு.க. தலைமையின் வேண்டுகோளின்படி நடைபெற்று இருக்கிறது. 

இந்த அளவுக்கு காங்கிரசுக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய இவர்களுக்கு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டியவர்கள் இந்த மாநிலத்தில் உள்ள பாவப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களே. இந்த கபடநாடகங்களை எல்லாம் தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், நகரத்திலிருந்தும் எனக்கு வருகின்ற தகவல்கள் இதைத் தான் குறிப்பிடுகின்றன.  தொழில்நுட்ப வல்லமையுடைய இளைய தலைமுறையினர் எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னணு அஞ்சல் மூலமாக பரிமாறிக் கொள்ளும் செய்திகளும் இதைத் தான் பிரதிபலிக்கின்றன.  ஆனால், வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது.  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் தன்னுடைய விலைமதிப்பற்ற வாக்கினைச் செலுத்த முன்வர வேண்டும்.  இல்லையெனில், திருமங்கலம் யுக்தி, சிவகங்கை யுக்தி, என பாடப் புத்தகங்களில் இடம்பெறாத சட்டவிரோத யுக்திகள்  எல்லாம் மீண்டும் செயல்படுத்தப்படும். தமிழக அரசியலில் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டிய இந்தத் தருணத்தில், தமிழ்நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், செழுமையாகவும், பிரகாசமாகவும் விளங்குவதை உறுதி செய்ய அனைவரும் விழிப்புடனும், எழுச்சியுடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும்.  ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும்.  தனது ஜனநாயக கடமையை ஆற்றி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்.  இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: