முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவின் பாதுகாப்புக்கு புதிய அணை அவசியமாம்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், நவ.25 - கேரளத்திற்கு பாதுகாப்பு என்ற எங்களின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். மேலும் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருவதாலேயே புதிய அணை கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். 

3 நாள் பயணமாக டெல்லி சென்று திரும்பிய பின் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லைப் பெரியாறில் கடந்த ஜூன் மாதம் முதல் 20 சிறிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அணை பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஆகையால் புதிய அணை கட்ட வேண்டியது அவசியம் என்றார். 

மேலும் இது குறித்து டெல்லியில் அனைத்து மட்டங்களிலும் தெளிவுபடுத்தி இருப்பதாக கூறிய அவர், கேரளாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். புதிய அணை கட்டப்படுவதன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீரும், கேரளாவிற்கு பாதுகாப்பும் கிடைக்கும். தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார். 

இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பேசி சுமூக தீர்வு காண முன்வருமாறு கேரள நீர்ப்பாசன துறை அமைச்சர் ஜோசப் அழைப்பு விடுத்துள்ளார். இடுக்கி மாவட்டத்தில் நிகழ்ந்து வரும் தொடர் நில அதிர்வுகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஏற்பட்டுள்ள பலவீனமான நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். 

புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நீரின் அளவு எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது. இதனை எத்தகைய வடிவிலும் உறுதிமொழி அளிக்க கேரளா தயாராக இருக்கிறது. இது குறித்து தமிழகம் எவ்வித பயமும் கொள்ளத் தேவையில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தற்போது வரை 20 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. 

அணையை ஆய்வு செய்த ரூர்கி ஐ.ஐ.டி. வல்லுனர்கள் ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டால் அணை முழுவதும் உடைந்து விடும் என்றும், அப்படி ஒரு சூழ்நிலையில் மக்களை காப்பாற்றுவது என்பது இயலாத காரியம் என்றும் கூறியுள்ளனர். எனவே பெரியாறு அணையின் கீழ் வசிக்கும் 30 லட்சம் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இவ்விஷயத்தில் தமிழகம் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!