முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை சீனா மீண்டும் தாக்குமா? பிரதமர் மறுப்பு

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.15 - இந்தியாவை சீனா மீண்டும் தாக்குமா? என்ற கேள்விக்கு கருத்துச்சொல்ல பிரதமர் மன்மோகன் சிங் மறுத்து விட்டார். என்றாலும் எல்லை பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இரு நாடுகளின் கொள்கையாக இருக்கிறது என்று அவர் கூறினார். பாராளுமன்றத்தின் லோக் சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஒரு தகவலை தெரிவித்தார். இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்த ஆயத்தம் ஆகி வருவதாகவும் இதற்கான முக்கிய பகுதிகளை சீனா குறித்து வைத்துள்ளதாகவும் இந்த தாக்குதல் விரைவில் நடக்கலாம் என்றும் தனக்கு தகவல்கள் வந்துள்ளதாக முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து தான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

இரு நாடுகளின் எல்லை தொடர்ந்து அமைதியாக இருந்து வருகிறது என்றும் எனவே இந்தியாவை தாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து கருத்தை பரிமாற அரசு விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு பிரம்மபுத்திரா தண்ணீரை சீனா நிறுத்திவிட்டதாக முலாயம்சிங் கூறியதையும் பிரதமர் மறுத்தார்.

இந்தியாவுக்கான பிரம்மபுத்திரா நீரை சீனா நிறுத்தாது என்று தனக்கு உயர் மட்டத்திலிருந்து உறுதி கூறப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகள் என்று நாம் சொந்தம் கொண்டாடும் பகுதிகள் சிலவற்றில்  சீனாவின் ஊடுருவல் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இது போன்ற விஷயங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள இரு நாடுகளின் ராணுவ தளபதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். சீனாவுடன் இந்தியா நட்புறவு மற்றும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் இதே போல சீனாவும் இதே கொள்கையை கடைப்பிடித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் இதே கொள்கையைத்தான்  இதற்கு முன்பு இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும் பின்பற்றி வந்தது என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். எல்லை பிரச்சினையில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார். இந்த பேச்சுவார்த்தைகளில் கடந்த 2005 ம் ஆண்டு நல்ல முன்னேற்றம் காணப்பட்டது என்றும்  ஆனால் அதன் பிறகு இந்த  பேச்சுவார்த்தையில் அவ்வளவாக முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்