முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்க்கரை ஆலைகள் நவீன மயமாக்குவது குறித்து-வேலுமணி

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 22 - தொழில்துறை அமைச்சர் சர்க்கரைத் துறை வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தொழில் துறை அமைச்சர் வேலுமணி தமிழக அரசின் சர்க்கரைத் துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து  நேற்று தலைமைச் செயலகத்தில் உள்ள தொழில்துறை கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் இயக்கத்தில் உள்ளன.  இந்த பருவத்தில் இதுவரை 14 ஆலைகள் அரவையைத் துவக்கி உள்ளன.  கரும்பு அரவையுடன் சேர்த்து சேத்தியாதோப்பு, செய்யார், சுப்ரமணிய சிவா ஆகிய மூன்று கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இணைமின் உற்பத்தியும், அமராவதி மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் வடிப்பகத்தின் மூலம் எரிசாராய உற்பத்தியும் செய்யப்படுகிறது.  கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளின் செயல்பாட்டினை ஆய்வு செய்த அமைச்சர், ஆலைகள் திறம்பட செயல்பட அறிவுரைகளை வழங்கி, விவசாயிகளுக்கு கரும்புத் தொகையை அவ்வப்போது உரிய நேரத்தில் வழங்குமாறு தெரிவித்தார். தமிழக விவசாயிகளின் வருவாயை பெருக்கும் நோக்கத்துடனும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இலாபத்தில் இயக்க ஏதுவாகவும் தமிழக அரசு 12 கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1241.15 கோடி செலவில் இணை மின்உற்பத்தி திட்டத்தினையும் ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டத்தினையும் செயல்படுத்தி வருகிறது. தொழிற்துறை அமைச்சர் ஆய்வின்போது இணை மின்உற்பத்தி திட்டத்தினையும் நவீனமயமாக்கல் திட்டத்தினையும் குறித்த காலத்தில் செய்து முடித்து உபரி மின் உற்பத்தியை தழிழக அரசு மின்சார வாரியத்திற்கு வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  மேலும் சர்க்கரைத் துறையை லாபத்தில் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் சர்க்கரைத் துறை இயக்குநர் மதிவாணன், தொழில்துறை இணைச் செயலாளர் சண்முகம், இராஜேந்திரன், கூடுதல் இயக்குநர்,  ஜெய்சிங் செல்வராஜ், இணைய தனி அலுவலர்,  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்