முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், பிப்.10 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான லஞ்ச ஊழல் வழக்குகளை மீண்டும் புதுப்பிக்க தேவையான ஆவணங்களை சுவிட்சர்லாந்து நாட்டு அதிகாரிகளிடம் இருந்து வாங்கித்தர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது பல்வேறு பழைய ஊழல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை தூசிதட்டி மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை நிறைவேற்ற கிலானி மறுத்துவிட்டார். இதையடுத்து கிலானியை நேரில் ஆஜராகும்படி சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை கண்டிப்பாக புதுப்பித்தே ஆகவேண்டும் என்றும், அந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சுவிஸ் நாட்டு அதிகாரிகளிடம் இருந்து கிலானி பெற்றே தீரவேண்டும் என்றும் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி ஆணை பிறப்பித்துள்ளார். 

சுவிஸ் நாட்டு அதிகாரிகளுக்கு இது தொடர்பாக பிரதமர் கிலானி ஒரு கடிதம் எழுதவேண்டும். அப்போதுதான் கிலானிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தமது உத்தரவில் கூறியுள்ளார். ஆசிப் அலி சர்தாரி தனது ஊழல் பணத்தை சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார் என்றும், இதன் மதிப்பு 6 கோடி டாலர் என்றும் கூறப்படுகிறது. இந்த 6 கோடி டாலர் பணத்தை பாகிஸ்தானுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றால் சுவிஸ் நாட்டு அதிகாரிகளுக்கு கிலானி கடிதம் எழுதியே தீரவேண்டும் என்றும் நீதிபதி தமது உத்தரவில் கூறியுள்ளார்.  

பிரதமர் கிலானி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு  தொடர சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வருகிற 13 ம் தேதி கிலானி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அதே சுப்ரீம் கோர்ட்டில் கிலானி மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மேல் முறையீட்டு மனுவின் மீது நடந்த விசாரணையின்போதுதான் கிலானிக்கு மேற்கண்ட உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony