முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்மர கடத்தல் தகராறில் அதிபர் கொலை: 5 பேர் கைது

சனிக்கிழமை, 5 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

 

சென்னை, ஜூலை.6 - சென்னை கவுரிவாக்கம் சேலையூரை சேர்ந்தவர் சுலைமான் (வயது57). தொழில் அதிபர். இவருக்கு செம்மரக்கட்டை கடத்தலிலும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 29–ந் தேதி வீட்டை விட்டு சென்ற இவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இது குறித்து சுலைமானின் மகள் நசிமாபானு சென்னை பள்ளிக்கரனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சென்னை, பள்ளிக்கரனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையிலான போலீசார் சுலைமானை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது ‘ரிங்டோன்’ மட்டும் கேட்டது. நீண்ட நேரம் ரிங்டோன் கேட்டும் அவர் எடுக்கவில்லை. ஒரு நாள் மட்டும் இயங்கிய செல்போன் அதன்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதனை வைத்து விசாரித்தபோது அந்த செல்போன் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே அம்முண்டி பகுதியில் இருந்தது தெரிய வந்தது.

அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அதில் வேலூரை அடுத்த திருவலம் இ.பி.கூட்ரோடு பகுதியை சேர்ந்த சரவணன் அவரிடம் பேசியது தெரியவந்தது. சரவணனை பிடித்து போலீசார் விசாரித்தபோது செம்மரக்கட்டை வியாபாரத்திற்காக சுலைமானை அழைத்ததாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திருவலம் அருகே உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை வேல்நகர் அருகே உள்ள பாலா என்பவர் நிலத்தில் அமர்ந்து செம்மர வியாபாரம் தொடர்பாக பேசி கொண்டிருந்தோம்.

செம்பராயநல்லூர் பகுதியை சேர்ந்த செம்மரக்கட்டை வியாபாரத்தில் தொடர்புடைய காளி (24), சரத் (19), சதீஷ் மற்றும் நிலத்தின் உரிமையாளர் வேல்நகர் பாலா ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணன், காளி, சரத், சதீஷ், பாலா ஆகிய 5 பேரும் சேர்ந்து சுலைமானை தாக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர் சுலைமானின் உடலை வேல்நகர் பாலாவின் தோட்டத்திலேயே புதைத்துள்ளனர். சுலைமானிடம் இருந்து 15 சவரன் நகைகள், ரூ.40 ஆயிரம் செல்போன் மற்றும் கார் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அனைவரும் தலைமறைவாகி விட்டனர். காரை காட்பாடியில் உள்ள பார்க்கிங் பாயிண்டில் நிறுத்தி உள்ளனர். இதையடுத்து சரவணன், பாலாவை போலீசார் கைது செய்தனர்.

2 பேரையும் போலீஸ் துணை சூப்பிரண்டு மதிவாணன், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், பள்ளிக்கரனை இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் சுலைமானின் உடல் புதைக்கப்பட்ட வேல்நகர் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுலைமானின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கொலையாளிகள் அடையாளம் காட்டினர்.

வருவாய் துறையினர் முன்னிலையில் சுலைமானின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த உடல் புதைக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது. தடய அறிவியல் நிபுணர் பாரி ஆய்வு செய்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவனைக்கு பிணம் அனுப்பப்பட்டது.

இந்த கொலையில் தொடர்புடைய காளி, சரத், சதீஷ் ஆகியோர் கடந்த மே மாதம் 25–ந் தேதி செம்பராயநல்லூரில் நடந்த ரிச்சர்டு என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மரக்கட்டை கடத்தல் தகராறில் சென்னை தொழில் அதிபர் ஒருவர் திருவலம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்