முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்-க்கு எதிரான போரில் இணைகிறது கனடா

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

ஒட்டாவா, அக்.10 - ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இணைந்து கனடா பங்கேற்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் நிலப்பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் அணி திரண்டுள்ளன. தீவிரவாதிகள் மீது தொடர்ந்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போரில் பங்கேற்பதா, வேண்டாமா என்பது தொடர்பான விவாதம், கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி 157 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

போரில் ஈடுபடக் கூடாது என்று கூறி 134 பேர் வாக்களித்தனர். பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிகளின் உறுப்பினர்கள் போருக்கு ஆதரவான நிலைப்பாட்டையும், எதிர்க்கட்சிகளான புதிய ஜனநாயகக் கட்சி, முற்போக்குக் கட்சி உறுப்பினர்கள் போருக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்தனர். போரில் பங்கேற்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, 600 விமானப் படை வீரர்கள், போர் விமானங்களை ஈராக், சிரியாவுக்கு அனுப்பிவைக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த போரில் தரைப் படையினரை அனுப்புவதில்லை என்ற முடிவை பிரதமர் எடுத்துள்ளார். ஏற்கெனவே, ஈராக் ராணுவ படைக்கு ஆலோசனை அளிக்க கனடாவைச் சேர்ந்த சிறப்புப் படையைச் சேர்ந்த 69 வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பினரின் தாக்குதல் திட்டத்தை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் முறியடித்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். 20 முதல் 21 வயதுடைவர்கள். இவர்களில் ஒருவர் மேற்கு லண்டனையும் மற்றவர்கள் மத்திய லண்டனையும் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் சிரியா சென்று ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு திரும்பியுள்ளார். நால்வரும் ஆயுதங்கள் பெற்று தனிப்பட்ட நபர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது கடந்த சில நாட்களாக இவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும் தற்போது மத்திய லண்டன் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விசாரணையின் ஒருபகுதியாக மேற்கு மற்றும் மத்திய லண்டன் குடியிருப்பு பகுதியில் சோதனைப் பணியிலும் போலீஸார் ஈடுபட்டனர். இவர்களுக்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டம் இருந்ததா என்று தெரியவில்லை. விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடக்க நிலையில் இருப்பதால் இதுகுறித்த விவரங்கள் பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்