முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாளு அம்மாளை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக்.28 - 2ஜி விவகாரத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி முறைகேடாக வந்தது குறித்து அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்கக் கோரி அவரது மகள் செல்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க மறுத்ததோடு, செல்வி மனுவை தள்ளுபடி செய்தது.

ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு முறைகேடாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது; இதற்கு ஆதாயமாக கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது என்பது சிபிஐ புகார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவரான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

அதே நேரத்தில் கலைஞர் டிவிக்கு பணம் கைமாறிய விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு அன்னிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் தனியே ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உட்பட 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

வயோதிகம் காரணமாக ஞாபகசக்தி குறைபாடு ஏற்பட்டுள்ளதால் வழக்கில் இருந்தே தன்னை விடுவிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் மனு தாக்கல் செய்த மனுவை கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது உச்சநீதிமன்றமும் தயாளு அம்மாளை விடுவிக்க மறுத்துவிட்டதால் அவர் விரைவில் வழக்கையும், கைது நடவடிக்கையும் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்