முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பங்களுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை இன்றைய சூழல் உணர்த்தி உள்ளது: சானியா சொல்கிறார்

சனிக்கிழமை, 13 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : வாழ்க்கை முழுவதும் எப்போதும் வேலையில் மூழ்கி இருப்பதால், மனநலம் ஒரு முக்கியமான பிரச்னை என்பதை உணராமல் போகிறோம் என்று டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தெரிவித்துள்ளார். 

இது குறித்து சானியா கூறியிருப்பதாவது:-

நாம் எல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில்  மனம் சார்ந்த பிரச்னையில் சிக்குகிறோம். அதை அனுபவிக்க நேரும் வரை மனநலம் என்பதை நாம் கண்டுகொள்வதில்லை. கவலை, பதற்றம், மனச்சோர்வு,  தூக்கமின்மை போன்றவை இயல்பானது. இதை என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். என் வாழ்க்கையிலும் பதற்றத்தை எதிர்கொண்டேன். அதில் இருந்து வெளியேற ஏதும் தெரியவில்லை. ஆனால் ஒரு முகமூடி அணிந்து அதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறோம். அந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்வதில்லை.

வாழ்நாள் முழுவதும் எப்போதும் வேலைகளில் பரபரப்பாக இருக்கும் நாம்  மனநலனை புறக்கணிக்கறோம். மனம் சோர்வடையும்போது அழுவது நல்லது. அந்த இக்கட்டான சூழல் ஏற்படும் போது உங்களுக்கு நெருக்கமானவருடன் பேசுங்கள். நானும் அதைச் செய்கிறேன். அது உங்களை சோர்வில் இருந்து வெளியேற்ற உதவும். எப்போதும் குடும்பத்தினருடன்  நேர்மறையாகவும், நெருக்கமாகவும் இருப்பது முக்கியமானது. என் குடும்பத்தினரிடமிருந்து, குறிப்பாக என மகனிடமிருந்து பலத்தை பெறுகிறேன்.

அந்த நாள் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அவனது புன்னகை எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. அப்படி நமக்கு உற்சாகத்தை தரும் ஒருவர் எல்லோருக்கும் இருப்பார். அவருடன் எப்போதும் நெருக்கமாக இருங்கள்.இந்த இக்கட்டான சூழ்நிலையில் நானும், எனது கணவர் சோயிப் மாலிக்கும் (பாகிஸ்தான்) வேறுவேறு நாடுகளில் சிக்கியுள்ளோம்.

இது எப்போது முடிவடையும் என்று தெரியவில்லை. ஆனால் செல்போன் மூலம் தொடர்பில் இருக்கிறோம். என் மகன் இஷான் தனது தந்தையை  பார்க்க முடியாமல் தவிக்கிறான். எப்படி இருந்தாலும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்.  இந்த சூழல் முடிவுக்கு வந்ததும் நாங்கள் மூவரும்  ஒன்றாக நேரத்தை செலவிட விரும்புகிறோம். பலர் பட்டினியால் அவதிப்படும்போது, நமது மேசைகளில் உணவு இருக்கிறது.

இன்றைய சூழல் குடும்பங்களுடன் இருப்பதன் முக்கியத்தை உணர்த்தி உள்ளது. இந்த இக்கட்டான சூழல் நிச்சயம் மாறும். உள்ளூர் சிறு வணிகர்களை நாம் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு சானியா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து