முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு பேஸ்புக் - கூகுள் நிறுவனங்கள் ஒப்புதல்

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு, புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்றுக் கொள்ள உள்ளதாக பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள ஜனநாயக நாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதளங்கள் மிகப்பெரிய பயனர் கூட்டத்தையும், லாபத்தையும் ஈட்டியுள்ளன. ஆனால், இந்தத் தளங்கள் எதுவும் இந்தியாவின் சட்ட திட்டங்களை மதிப்பதில்லை. மேலும், உண்மை சரிபார்க்கும் அவர்களது வழிமுறை குறித்தும், எது தவறான டுவீட் என்பதை எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்கிற வழிமுறை குறித்தும் வெளிப்படையாக எதையும் சொல்ல மறுத்து வருகின்றன.

இதனால் இந்தியாவில் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்பட இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021-ன் கீழ், இந்திய அரசிதழில் புதிய விதிமுறைகளைக் கடந்த பிப்ரவரி 25-ம் தேதியன்று இந்திய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதில் பெரும்பாலான விஷயங்களை இன்னும் சமூக வலைதளங்கள் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விதிமுறைகளின் கீழ் வரவில்லையென்றால், இடையீட்டாளர்கள் என்கிற நிலையை சமூக வலைதளங்கள் இழக்கும். அவற்றால் நடக்கும் குற்றச்செயல்களுக்கு அந்தந்தத் தளங்கள் பொறுப்பாகும் நிலையும் உருவாகியுள்ளது.

கூ என்கிற இந்திய சமூக ஊடக நிறுவனத்தைத் தவிர வேறு எந்த முன்னணி சமூக ஊடகமும் அவர்கள் நிறுவனத்தில் குறைகளைக் கேட்டறியும் அதிகாரியையும், தலைமை இணக்க அதிகாரியையும், நோடர் தொடர்பு நபரையும் இன்னும் நியமிக்கவில்லை. மூன்று மாதங்கள் கெடு இருந்தும் இவை எதையும் சமூக வலைதளங்கள் செய்யவில்லை என்பது அரசுத் தரப்பைக் கோபப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக ஊடகங்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த விதிகளை பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தங்களுக்கான சில கட்டுப்பாடுகள் குறித்து அரசுடன் பேசி தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதுபோல்  இந்தியாவின் சட்டமியற்றும் நடவடிக்கைகளை தாங்கள் மதிப்பதாக கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சட்டங்களை மீறும் வகையாலான உள்ளடக்கங்களை நீக்கிய நீண்ட வரலாறு கூகுளுக்கு உண்டு என்றும் அவர் கூறினார். 

டிஜட்டல் தளங்களுக்கான புதிய விதிகளை கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்து அதை அமல்படுத்த 3 மாத கால அவகாசம் வழங்கியது. அவகாசம் முடிய சில மணி நேரங்களே பாக்கி இருந்த நிலையில் கிரிமினல் நடவடிக்கைகளை தவிர்க்கும் நோக்கில் அவற்றை ஏற்றுக் கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து