முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேசத்தில் புதுமை: தடுப்பூசி போட்டால் மட்டுமே மது விற்பனை

திங்கட்கிழமை, 31 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

எடவா : உத்தரபிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய ஆயுதமாக இருப்பது தடுப்பூசி. இதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இருந்தாலும் போதிய விழிப்புணர்வு இன்மை மற்றும் தேவையற்ற தயக்கம் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள சிலர் மறுக்கின்றனர்.

உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களைப் பார்த்து விஷ ஊசி போட வருகிறார்கள் என நினைத்து சரயு நதியில் குதித்து தப்பித்த சம்பவமும் நிகழ்ந்தது. இதனால் கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

எடவாக் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மது விற்பனை செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். எடவாக் வட்டார அதிகாரியான ஹேம் சிங், சில நாட்களுக்கு முன்பு மதுக்கடைகளில் ஆய்வு செய்துள்ளார். அப்போது, மது வாங்க நின்றிருந்த பலரும் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கூறியுள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையைக் காட்டினால் மட்டுமே அவர்களுக்கு மது வழங்க வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எனினும் இது உத்தரவு அல்ல, அறிவுறுத்தல் மட்டும்தான் என்கிறார்கள் சக அதிகாரிகள். 

இதேபோல, பைரோஸ்பாத் மாவட்ட நிர்வாகம், அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே இந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து