முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்த மேட்டூர் நீர்மட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 5 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைவான அளவே தண்ணீரே திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 69.39 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்து 71.10 அடியாக அதிகரித்து உள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

கபினி அணையில் இருந்து நேற்று காலை 6 ஆயிரத்து 750 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9 ஆயிரத்து 609 கன அடியும் என மொத்தம் 16 ஆயிரத்து 359 கன அடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது. ஒகேனக்கல் மற்றும் சுற்றுப்பகுதியில் பெய்த மழை நீரும் ஆற்றில் வந்து சேருகிறது.

இதனால் ஒகேனக்கல்லில் தற்போது 20 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 16 ஆயிரத்து 670 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 22 ஆயிரத்து 875 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரியில் 5 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 650 கன அடியும் மொத்தம் 5 ஆயிரத்து 650 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைவான அளவே தண்ணீரே திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 69.39 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்து 71.10 அடியாக அதிகரித்து உள்ளது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. அணை நீர்மட்டம் உயர்ந்து வருவது டெல்டா பாசன விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து