முக்கிய செய்திகள்

தமிழகத்தில் முழுகொள்ளளவை எட்டியுள்ள அணைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

CM 2021 10 26

தமிழகத்தில் முழுகொள்ளளவை எட்டியுள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள், உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.,

தமிழ்நாட்டில் இன்று முதல் (நேற்று), வடகிழக்கு பருவமழை துவங்கப் போகிறது என்றும், இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழ்நாட்டிற்கு இயல்பான மழைப்பொழிவு கிடைக்கப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை உங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். இந்த அக்டோபர் மாதத்திலேயே கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. மேலும் 17 மாவட்டங்களிலும் அதிக மழை பெய்துள்ளது. எனவே, நாம் கவனத்துடன் பணியாற்ற வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளோம்.

அரசுத் துறையின் செயல்பாடும், பொதுமக்களின் எண்ணமும் ஒன்றிணைய வேண்டும். இயற்கையை எதிர்கொள்ளும் மனநிலையை மக்களுக்கு முதலில் உருவாக்க வேண்டும். அதற்காக, முன்னெச்சரிக்கை முயற்சிகளாக அரசு எதையெல்லாம் செய்யவிருக்கிறது என்பதையும் மக்களுக்கு நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் மக்களோடு இணைந்தே இருக்கும்படி நீங்கள் திட்டமிட வேண்டும்.

பேரிடர் காலங்களில் நன்கு சேவையாற்றக்கூடிய தன்னார்வ தொண்டு அமைப்புகளை நீங்கள் தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டும். சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும், 24 மணி நேரமும் உரிய துறை அலுவலர்களோடு செயல்படவேண்டும்.

இந்த மையங்களை பொதுமக்கள் 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் அனைத்து பொதுமக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். 100 என்று சொன்னால், அது காவல் துறை. 108 என்று சொன்னால், அது அவசர ஆம்புலென்ஸ் என்று மக்கள் மனதிலே பதிந்திருக்கிறது. அதைப்போல, இந்த எண்களும் மக்கள் எளிதில் பயன்படுத்தும் சொற்களாக மாற வேண்டும்.

இந்த நேரத்தில் மீனவர்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தியாக வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கும், கரையில் உள்ள மீனவர்களுக்கும், வானிலை முன்னறிவிப்பு குறித்து, நவீனத் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும், மீன்வளத்துறை மூலமாகவும் தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த மழைக்காலத்தில், அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்துகொண்டேயிருக்க மீன்வளத்துறை தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

தூர்வாரப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள், வரத்துக் கால்வாய்கள், நீர்வழிப் பாதைகள் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்பதை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள், மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெரும்பாலான அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. எனவே, முழுகொள்ளளவை எட்டியுள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அணைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி, அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அணை பாதுகாப்பு, அணைகள், நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றுவது தொடர்பான விதிமுறைகளைத் தவறாது பின்பற்றி, உபரி நீர்த் திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கைகளை வழங்கி உபரி நீரைத் திறந்து விட வேண்டும்.

பருவமழை காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக் காலங்களில் நோய்கள் அதிகம் உருவாகி, பரவிடக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், மருந்து உபகரணங்கள், பாம்புக் கடிக்கான மாற்று மருந்தும், ஆக்சிஜன் உருளைகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் மக்களை மீட்கும்போது, மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும். இதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்துத் துறைகளுடைய ஒருங்கிணைப்புதான், அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படக்கூடிய அனைத்துப் பாதிப்புகளையும் தடுக்கும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து