முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு தி.மு.க. - அ.தி.மு.க.வில் கடும் போட்டி : இட பங்கீடு, ஆதரவு கோருவது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
ADMK-DMK 2022 05 13

Source: provided

சென்னை : தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு தி.மு.க. - அ.தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக இட பங்கீடு, ஆதரவு கோருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

பாராளுமன்ற மேல்சபையில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. காலியாகப் போகும் இந்த 6 இடங்களுக்கும் அடுத்த மாதம் (ஜூன்) 10ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாதம் 24-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

தற்போதைய நிலையில் ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவைப்படும். அதன்படி பார்த்தால் தி.மு.க.வுக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே 4 எம்.பி.க்கள் தி.மு.க.வுக்கு கிடைக்கும். அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் கிடைக்கும். இந்த பதவிகளுக்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

தி.மு.க.வை பொறுத்தவரை கட்சியின் சட்டத்துறை செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க.வை சேர்ந்த வைத்திலிங்கம் ஒரு ஆண்டு பதவி இருந்த நிலையில் ராஜினாமா செய்து விட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அந்த இடத்துக்கு நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ராஜேஷ்குமார் தேர்வானார். மிக குறைந்த காலமே அவர் எம்.பி.யாக இருப்பதால் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கும் வகையில் ஒரு இடத்தை அவருக்கு கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் ஒரு இடம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மீதம் இருப்பது ஒரே ஒரு இடம்தான். அந்த ஒரு இடத்தை பெறுவதில் தி.மு.க.வினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனவே அவர் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தை அணுகி வருவதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகளும் ஒரு இடத்துக்கு ஆசைப்படுவதாகவும் இது தொடர்பாக தி.மு.க. மேலிடத்துடன் பேசி வருவதாகவும் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

அ.தி.மு.க.வில் 2 இடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு தலா ஒரு இடம் என்று பங்கிட்டுள்ளனர். அதே நேரம் 2 எம்.பி.க்கள் வெற்றி பெற மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் தேவைப்படுகிறது. அதற்கு பா.ஜனதாவிடம் ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, செம்மலை, பொன்னையன், கோகுலஇந்திரா, முன்னாள் எம்.பி. வேணுகோபால், கட்சியின் மூத்த நிர்வாகியான தமிழ்மகன்உசேன் உள்பட பலரும் கேட்பதால் யாருக்கு வழங்குவது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரான தேனி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையத்கானுக்கு வழங்க திட்டமிட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. யாருக்கு கொடுக்கலாம் என்று தி.மு.க.வே திணறி கொண்டிருக்கும் நிலையில் ஒரு சீட் தரலாம் என்ற நம்பிக்கையில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்குள் இப்போதே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே அவர் மீண்டும் எம்.பி.யாக காய்களை நகர்த்தி வருகிறார். தி.மு.க. தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் அவருக்கு எம்.பி. பதவி கொடுப்பதை தி.மு.க.வும் விரும்பும். எனவே அவர் வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

தலித் சமூகத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. விசுவநாதன், தற்போதைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு மற்றும் டெல்லி அரசியலில் வலுவாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உள்பட பலர் முயற்சித்து வருகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் இடங்கள் பங்கீடு, ஆதரவு கோருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து