முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.ஐ.ஆர். இயக்குனர் ஜெனரலாக நெல்லையை சேர்ந்தவர் நியமனம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
Stalin 2020 07-18

Source: provided

புது டெல்லி ; அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். 

சி.எஸ்.ஐ.ஆர் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். நாடு முழுவதும் 38 ஆய்வகங்களை கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் 4 ஆயிரத்து 600 விஞ்ஞானிகள், 8 ஆயிரம் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். விண்வெளி , கட்டமைப்பு , கடல் அறிவியல், உயிர் அறிவியல், உலோகம், இரசாயனங்கள், சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இந்த நிறுவனம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

சி.எஸ்.ஐ.ஆர்.-ன் இயக்குநர் ஜெனரலாக இருந்த சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், சி.எஸ்.ஐ.ஆரின் புதிய இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் செயலாளராகவும் பொறுப்பேற்பார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கலைச்செல்வி தனது பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் படித்துள்ளார். தற்போது, காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் தான். ஆராய்ச்சி துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ள கலைசெல்வி, மின்வேதியியல் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளார். இவர் 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் ஆறு காப்புரிமைகளையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,  இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான  C.S.I.R -ன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்.  தமிழ் வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று என்று அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து