முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரை வீழ்த்தி குவாலிபயர் 2-க்கு ராஜஸ்தான் தகுதி

வியாழக்கிழமை, 23 மே 2024      விளையாட்டு
23-Ram-53

Source: provided

அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிபயர்-2 போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

அஸ்வின் விக்கெட்...

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி 33 ரன்களும், படிதார் 34 ரன்களும், மஹிபால் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆவேஷ்கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

ஜெய்ஸ்வால் அபாரம்...

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேட்மோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். ஜெய்ஸ்வால் 45 ரன்களிலும், கேட்மோர் 20 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன்களிலும், ரியான் பராக் 36 ரன்களிலும், துருவ் ஜுரல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

வெற்றிக்கு சம வாய்ப்பு...

ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்கும் வெற்றி பெறுவதற்கான சம வாய்ப்பு இருந்த போது, ஹெட்மெயர் மற்றும் பாவல் ஆகியோர் ராஜஸ்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். 19வது ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி சென்னையில் நாளை நடைபெறும் குவாலிபயர்-2 போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர்கொள்கிறது.

அதிக கேட்சுகள்... 

இந்த தோல்வியின் மூலம் 17வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்துள்ளது. இந்த போட்டியில் போது ராஜஸ்தான் அணியின் பாவல், 4 கேட்சுகளை பிடித்து, ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இதில் முதலிடத்தில் மும்பை வீரர் முகமது நபி, சென்னை வீரர் டேரில் மிட்சல் ஆகியோர் 5 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இருவரும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். இதே போல் சச்சின், டேவிட் வார்னர், ரவீந்திர ஜடேஜா, ஃபாஃப் டூ பிளஸிஸ், ரியான் பராக் ஆகியோரும் ஒரே போட்டியில் 4 கேட்சுகளை பிடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

சஞ்சு சாம்சன் பாராட்டு

வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், எங்களது அணியில் பயிற்சியாளர்களான சங்ககாரா மற்றும் ஷேன் பாண்ட் ஆகியோர் நிச்சயம் வீரர்களுக்கு பெரிய அளவில் உதவுகிறார்கள். அவர்கள்தான் வெற்றிக்கு காரணம். அஸ்வின் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஒருபுறம் சிறப்பாக செயல்படும் வேளையில் ரியான் பராக், ஜெயிஸ்வால் போன்ற இளம் வீரர்களும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள் என்றார்.

கோலி புதிய சாதனை

இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில்  விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். டூ பிளசிஸ் 17 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். ஐ.பி.எல். தொடரில் 8 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி என்ற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷிகர் தவான் 6,769 ரன்கள் எடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து