முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஆயுர்வேதக் கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதிகள்

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.13 - நெல்லை பாளையங்கோட்டை, கன்னியாகுமரியிலுள்ள சித்தா, ஆயுர்வேதக் கல்லூரிகளுக்கு ரூ.10 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்துத்தரப்படும் என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.விஜய் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து பேசியதாவது:-

மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு எதை எதையோ தமிழகத்திற்கு செய்வதாக சொல்லிக்கொள்கிறது. ஆனால், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தை  உதாசீனப்படுத்துகிறது. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதுமானது.

கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற  ஆயுஷ் துறை,  திருநெல்வேலி பாளையங்கோட்டையிலுள்ள  சித்தா மருத்துவக் கல்லுரி மற்றும் கன்னியாகுமரி கோட்டாரிலுள்ள ஆயுர்வேத மருத்துவக்கல்லுரியை ஆய்வு செய்து சில குறைபாடுகளை கண்டறிந்து, கடந்த 2011-12 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்தது.  அதன்பிறகு முதல்வர் ஜெயலலதாவின் ஆட்சி அமைந்த பிறகு அந்த குறைபாடுகளெல்லாம் களைந்து, திரும்பவும் ஆயுஷை அணுகியபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை.      

மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை. அதன்பிறகு, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தின் உத்திரவின்பேரில் இரண்டுகல்லுரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.  முதல்வரின் ஆணைக்கிணங்க,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கும் பதில் இல்லை. அதன் பிறகு பாதிக்கப்பட்ட மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றம் சென்று வகுப்புகளை தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதால்தான் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால்,  மத்திய அரசின் ஆயூஷ் துறை திரும்பவும் நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை கேட்டு அதை நீதிமன்றம் மறுத்திருக்கிறது. இப்பொழுது அந்த ஆயூஷ் துறை உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக அறிகிறோம். மாற்றான் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது என்பதற்கு இது ஒன்றே உதாரணமாகும். இதிலே வேடிக்கை என்னவென்றால், தி.மு.கவினுடைய காந்திசெல்வன்தான் அங்கே மத்தியில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக உள்ளார்.   கல்வியை கூட அரசியலாக்குகிறார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை. இங்கே வாய்கிழிய பேசும் தி.மு.கவினரும், காங்கிரஸ்காரர்களும் இதற்கு ஒரு தீர்வினை தந்தால் மாணவர்களின் புண்ணியமாவது  கிடைக்கும் என்பதை இத்தருணத்தில்  தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் மொழி தமிழினம் என்று வாயளவில் மட்டுமே சொல்லித் திரிபவர்களை போல் அல்லாமல் தமிழ் மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்கு முதல்வரின் அரசு உரிய முக்கியத்துவம் கொடுத்து, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லுரி மற்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லுரி ஆகியவற்றை ரூபாய் 10 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பலப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

கல்குவாரிகள், கட்டிடப்பணிகள், சாலைப்பணிகளில் பணிபுரியு பணியாளர்களுக்கென சிலிக்கோசிஸ் நோய் சிறப்பு சிகிச்சை மையங்கள் சில பணிகள் தொழில் ரீதியான சுகாதார பிரச்சினைகளை உடையதாக இருக்கும். சிமெண்ட் தொழிற்சாலை, சுரங்கத் தொழிற்சாலை, கட்டிடப்பணிகள்,  தார்சாலை பணிகள் போன்ற பணிகளில் ஈடுபடும்போது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் அந்த தொழில்களின் தன்மை அமைந்திருக்கிறது.  இவர்களுக்கு சிலிக்கோசிஸ் என்ற நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற தொழில்களில் பணிபுரியும் ஏழை எளிய மக்களுக்கும்தரமான சுகாதாரம் சென்றடைய வேண்டும்என்பது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கட்டளையாகும். தமிழகத்தில் கல்குவாரிகள், கட்டிடப்பணிகள், சாலைப்பணிகளில் பணிபுரியும் பணியாளர்கள் தும்பு, தூசுகளால் பாதிக்கப்பட்டு அவர்களது சுகாதார நிலை மோசமாக உள்ளது. இதற்கென சிறப்பு சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.    தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி,  இவர்களுக்கு தொடர் மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான சிகிச்சை அளிக்கப்படும்.

புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குதல், ஓரே நேரத்தில் நான்கைந்து மருத்துவக்கல்லுரிகளை அறிவித்து விட்டால்,  அவை தானாக உருவாகி, ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் என்று இறுமாப்புடன் கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த அவையில் அறிவிக்கப்பட்டு அவையாவும் காகிதப்புலிகளாக, கற்பனை குதிரைகளாக உள்ளது நாம் யாவரும் அறிந்ததே.

இன்று ஒரு மருத்துவக்கல்லுரி உருவாக்க தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதி, உபகரணங்கள், மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டுமென அறுதியிட்டு இந்திய மருத்துவக்கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இவற்றில் எங்கேனும் ஒரு சிறிய மாற்றங்கள் இருந்தாலும், அவை தக்கண்ணாடியால் பார்க்கப்பட்டு பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முதல்வர் ஜெயலலிதா,  மக்கள் நல்வாழ்வுத்துறை ஆய்வின்போது ஆண்டிற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை முடிவினை எடுத்துள்ளார்கள்.

முதல்வரின் ஆணைப்படி, நடப்பாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லுரி தொடங்கவும், அதற்கான புதிய கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இதே தருணத்தில்,  முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கீழ்ப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுரிகளில் ஒவ்வொரு கல்லூரிக்கும் கூடுதலாக 50 இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்திய மருத்துவகவுன்சிலின் ஆய்வு முடிந்துள்ளது. அதே போல , சிவகங்கை மருத்துவக்கல்லுரியில் 100 மாணவர் சேர்க்கைக்கான அனைத்து பணிகளும்  முடிவடைந்து இந்திய மருத்துவக்கவுன்சிலின் ஆய்வை எதிர்நோக்கி உள்ளது.   

தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்துதல்

ஒரு தேனீர் கடையை தொடங்க வேண்டுமென்றால் கூட உரிமம் பெற வேண்டும். ஒரு மருந்து கடையை தொடங்க வேண்டுமென்றால் கூட முறைப்படி விதிகளுக்கு உட்பட்டு முறையான உள் கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படுகிறது ஆனால், ஒரு மருத்துவமனை தொடங்க வேண்டுமென்றால் எவ்வித சட்டப்ர்வ கட்டுப்பாடுகளோ குறைந்த பட்ச விதிமுறைகளோ தற்போது இல்லை.  தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் என்ன?அங்கே பணிபுரிபவர்கள் முறையாக பயிற்சி பெற்றுள்ளார்களா? அங்கு அளிக்கப்படும்  சிகிச்சைகள் தரமாகவும் முறையாகவும் உள்ளதா ?

தேவையான நோய்ப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றனவா? இல்லையா? யார், யார் எந்தெந்த மருத்துவ சிகிச்சை முறைகளை அளிக்க தகுதி உள்ளவர்கள்? அங்கு பார்க்கப்படும் நோய் நிகழ்வுகள் முறைப்படி அரசுக்கு அறிக்கைகளாக தெரிவிக்கப்படுகிறதா? என்றால் இல்லை,  என்பதுதான் பதிலாக இருக்கிறது. ஆகவே, தமிழக முதல்வர் ஙீஜெயலலிதாவின் ஆணைப்படி, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மற்றும் கிளினிக்குகள் ஆகியவற்றின் செயல்பாட்டினை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும், ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு மருத்துவ அமைப்புகள் நெறிப்படுத்தும் சட்டம் மற்றும்மத்திய அரசால், ஏற்படுத்தப்பட்ட மருத்துவ அமைப்புகள் பதிவு மற்றும் நெறிப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றை வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்து உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மருத்துவமனையிலிருந்து பிரசவித்த தாய் வீடு திரும்பும்போது ஆட்டோவை தேடி, பேருந்து நிலையத்தை நாடி, பச்சிளம்சிசுவோடு இல்லம் சென்றடைய சிரமப்பட நேரிடுகிறது.  தான்பெற்ற செல்வத்தை பெற்றெடுத்த மகழ்ச்சியோடு தாய் வீடு செல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் பேறுகாலத்திற்குபின் பச்சிளங்குழந்தையுடன் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விஜய் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony