முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கத்தில் இன்று சொர்க்க வாசல் திறப்பு

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

திருச்சி, டிச. 24 - 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் நடை பெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி வரை பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. 

பகல் பத்தின் போது ரெங்கநாதருக்கு திருமொழி பாசுரமும், ராப்பத்தின் போது அபிநயங்கள், வியாக்யானத்துடன் அரையர்கள“ல் சேவிக்கப்படும். பகல்பத்து நிகழ்ச்சி கடந்த 14-ந்தேதி தொடங்கி இன்று டன் நிறைவு பெறுகிறது. இன்று (24-ந்தேதி) ராப்பத்து நிகழ்ச்சி தொடங்குகிறது. இன்று அதிகாலை 3.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப் படும். தொடர்ந்து ரத்தின அங்கி, கிளிமாலை, பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் சிம்ம கதியில் நம்பெருமாள் புறப்பாடு நடக்கிறது. 

இதையடுத்து ஜெயவிஜய வாசல், சந்தன மண்டபம், ராஜமகேந்திர சுற்று, நாழி கேட்டான் வாசல், குலசேகரம் பட்டணம், தங்க கொடிமரம், துரை பிரதட்சணம் வழியாக விரஜாநதி மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு நம்பெருமாளுக்கு ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் விண்ணப்பிக் கப்பட்டு தீர்த்த கோஷ்டி நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் வெள்ளத்தில் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து திருக்கொட்டகையில் பிரவேசிப்பார். 

சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் 4 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத் தப் பட்டு உள்ளனர். மேலும் 300 போக்குவரத்து பிரிவு போலீசார் நகர் முழுவதும் நிறுத்தப்பட்டு போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த நியமிக்கப்பட்டுள்ளனர். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை காண அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இதுதவிர ரூ.50, ரூ.250, ரூ.300, ரூ.2 ஆயிரம் என தனித்தனியாக கட்டணமும் இந்த ஆண்டு முதல் அமல்படுத் தப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு அவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள பெரிய திரையில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் சிரமமின்றி ரெங்கநாதரை வழிபட தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு வரிசையில் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுதவிர மாநகராட்சி சார்பில் மருத்துவ வசதிகளும், குடிதண்ணீர் வசதியும், கழிப்பிட வசதிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலம், மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் கூடும் என்பதால் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஸ்ரீரங்கமே போலீசாரின் வலையத்துக்குள் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. 

மேலும் பக்தர்களின் வசதிக்காக திருச்சி மாம்பழச்சாலையில் இருந்து அம்மா மண்டபம் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி திருவானைக்கோவில் வழியாக வர 5 கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை இளைஞர் நலன்  மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ, குமார் எம்.பி., மேயர் ஜெயா, கோட்டத்தலைவர் சீனிவாசன் வெல்லமண்டி நடராஜன் கவுன்சிலர் என்ஜினீயர் ராஜா, சகாதேவ் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்