முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., தேர்தலில் அஸ்ரப் போட்டியிடுவதில் சிக்கல்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மார்ச். 19 - பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஸ்ரப் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழப்பார் என்று பாகிஸ்தான் ஊடகமான எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் தெரிவித்துள்ளது. 

1986-ம் ஆண்டு ராஜா பர்வேஸ் அஸ்ரப் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து பேர்வின் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தை இஸ்லாமாபாத்திலுள்ள பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (சிடிஏ) அவர் பதிவு செய்தார். இந்த நிறுவனம் மனைகள், கட்டடங்கள் ஆகியவற்றை வாங்கி விற்பனை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தது. இஸ்லாமாபாத்தில் நிலம்  வாங்கிய அஸ்ரப்பின் நிறுவனம் அந்த இடத்தில் 12-க்கும் மேற்பட்ட கடைகளையும், 10-க்கும் மேற்பட்ட வீடுகளையும் கட்டியது.

இந்த கட்டடங்களை 1988-ம் ஆண்டு அந்த நிறுவனம் விற்பனை செய்தது. ஆனால் சி.டி.ஏ.வுக்கு செலுத்த வேண்டிய ரூ.20.6 லட்சத்தை 

செலுத்தவில்லை. இந்த நிறுவனத்துக்கு பல முறை நோட்டீஸ் அளித்தும் எந்த பதிலும் இல்லை. இதனால் அந்த கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த கட்டடங்களை வாங்கியவர்கள் அஸ்ரப்பின் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு சி.டி.ஏ.வுக்கு செலுத்த வேண்டிய பணத்தை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால்அந்த நிறுவனம் பணத்தை கட்டவில்லை.                   

இதையடுத்து வாடிக்கையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றத்தின் மனித உரிமைப் பிரிவில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.வழக்கு விசாரணையின்போது ஆஜரான சி.டி.ஏ. தலைவர் சாயத் தஹிர் ஸாபாஸ், பெருநகர குழுமத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை அஸ்ரப்பின் நிறுவனம் செலுத்த வில்லை என்று தெரிவித்தார். இதனால் சி.டி.ஏ.வின் தலைவர் மாற்றப்பட்டார். இஸ்லாமாபாத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் தாரிக் முகமது என்பவரை சி.டி.ஏ.வின் தலைவராக  அஸ்ரப் நியமித்தார்.

 இந்நிலையில்  நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு சி.டி.ஏ.வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிரதமர் அஸ்ரப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் அஸ்ரப் போட்டியிடுவதற்கான தகுதியை இழக்க நேரிடும். பாகிஸ்தான் மக்கள் சட்டம் 1976-ன் படி வர்த்தக பேரத்தில் ஒருவர் பணத்தை செலுத்தத் தவறியவர் என்று நிரூபிக்கப்பட்டால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. 

பாகிஸ்தான் பிரதமரின் 5 ஆண்டு பதவிக்காலம் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது.  இந்நிலையில் வரும் மே மாதம் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்