முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டி.வி.க்கு பணம் கொடுத்தவர்கள் யார்? யார்? சாட்சி வெளியிட்ட தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, மே - 2 - கலைஞர் டி.வி.க்கு சட்ட விரோதமாக பணம் கொடுத்தவர்கள் யார் யார் என்ற விபரம் சி.பி.ஐ. விசாரணையின் போது ஒரு சாட்சி மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாட்டிற்கு 1.90 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசா, மற்றும் அவரது செயலாளர்கள் , ஷாகித் பால்வா மற்றும் 5 நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டது தெரிந்ததே. கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரம் வெளியான பிறகு அதன் பங்குதாரர்களான தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி. , டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பின்னர் சமீபத்தில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கனிமொழி ஒரு கூட்டுச் சதியாளர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. எனவே அவர் எந்த நேரத்திலும் கைது ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் சாட்சி ஒருவர் மூலம் புதிய தகவல் வெளியாகி உள்ளது அதாவது கலைஞர் டி.வி.க்கு சட்டவிரோதமாக பணம்கொடுத்த விவகாரத்தில் கரீம் மொரானி என்பவர் உதவி இருக்கிறார். இவர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் துணைக்குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நபர் ஆவார். அது மட்டுமல்ல சினியுக் திரைப்பட நிறுவனத்தின் இயக்குனரும் ஆவார். கலைஞர் டி.விக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டி.பி. ரியாலிட்டி நிறுவன அதிபர்கள் ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்காஆகியோருடன் இணைந்து கரீம் மொரானி, கலைஞர் டி.வி.க்கு  பணம் கொடுத்துள்ளார். இந்த தகவலை சி.பி.ஐ.யிடம் வழக்கு விசாரணையின்போது ஒரு சாட்சி கூறியிருக்கிறார். அவரது பெயர் முகமது குலாம்மலி முரானி. இவரும் சினியுக் நிறுவனத்தின் மற்றொரு இயக்குனராவார். இந்த வழக்கில் சாட்சிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ள இவர், கரீம் மொரானியின் பங்கை புட்டுப்புட்டு வைத்துள்ளார். டி.பி.ரியாலிட்டி நிறுவனத்திற்கு உதவுவதற்காக கரீம் மொரானி அவர்களோடு இணைந்து பணம் கொடுத்ததாக சாட்சி குலாம்மலி முரானி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony