முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீரன் சின்னமலை சின்னம்: முதல்வர் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.24 - சேலம் மாவட்டம் சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவுச் சின்னம் காணொலி காட்சியின் மூலம் முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் திறந்து வைத்தார். அதன்பின் வாஞ்நாதனுக்கு மணிமண்டபத்தை திறந்து வைத்து ஓமந்தூரார் அரசின் தோட்டத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

முதல்வர் ஜெயலலிதா நேற்று (23.12.2013) தலைமைச் செயலகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான சேலம் மாவட்டம், சங்ககிரியில் 

60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தை திறந்து வைத்து, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

மாவீரர் தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போர் செய்த பெருமைக்குரியவர். சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே வாழ்ந்த ஒரு சின்னமலை என்று புகழப்பட்டவர். தனக்கென ஒரு பாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் முதல்வர் 

ஜெயலலிதாவால்  1995_ஆம் ஆண்டு தீரன் சின்னமலைக்கு தமிழக அரசின் சார்பில், ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் நினைவு விழா நடத்தப்பட்டு, அவ்விழாவில் அவரது வாரிசுகள் கௌரவிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலையின்  நினைவு நாளான, ஆடி மாதம் 18_ஆம் நாளினை அரசு விழாவாக அனுசரிக்க 2003_ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும், தியாகி தீரன் சின்னமலையின் நினைவைப் போற்றும் வகையில் 30 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணிமண்டபத்தை 2006_ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். 

சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலை பொலிவிழந்தும் அதன் பீடம் மற்றும் சுற்றுப்புறத் தரை மிகவும் சிதிலமடைந்தும் இருந்ததை சீர்செய்து 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலை வளாகம் மற்றும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு விவரங்கள் அடங்கிய பலகை ஆகியவற்றை 17.4.2013 அன்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

முதல்வர் ஜெயலலிதா 4.4.2012 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சேலம் மாவட்டம், சங்ககிரியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்து 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். 

அதன்படி, சேலம் மாவட்டம் சங்ககிரியில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் 1886_ம் ஆண்டு பிறந்த புரட்சியாளர் வாஞ்சிநாதன், கல்லூரிப் படிப்பு முடிந்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வனத் துறையில் பணியாற்றி வந்த போது சுதந்திர போராட்ட வீரர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் கவரப்பட்டு விடுதலை போராட்டத்தில் ஐக்கியமானார். தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நீலகண்ட பிரம்மச்சாரியுடன் இணைந்து பாரதமாதா சங்கம் என்ற புரட்சி அமைப்பில் சேர்ந்தார். 1911  ஜூன் மாதம் 17_ஆம் நாள் மணியாச்சி புகைவண்டி நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஆழ துரையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைந்தார். 

தமிழக அரசின் சார்பில், நாட்டு விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த வாஞ்சிநாதன் நினைவைப் போற்றிடும் வகையில்,  திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் 

ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

சென்னை மாநகரின் குறிப்பிடத்தக்கதொரு அடையாளமாக திகழ்ந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்திருந்த கலைவாணர் அரங்கத்தின் முக்கியத்துவத்தையும், தேவையையும் நன்கறிந்த முதல்வர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 25.4.2012 அன்று, "சென்னையில் இருந்த கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டு, தற்போது காலியாகவுள்ள அந்த இடத்தில் விரைவிலேயே இந்த அரசு ஒரு பிரமாண்டமான கலை அரங்கம்  கட்டும்'' என்று அறிவித்தார். மேலும், இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 61 கோடி ரூபாய் செலவில் புதிய கலை அரங்கம் அமைக்கவும், 2 கோடி ரூபாய் செலவில் மாநில செய்தி நிலையம் அமைக்கவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார். 

அதன்படி, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 452 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் மூன்று உயர் தளங்களுடன் கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தின் முதல் தளத்தில் சுமார் 600 பேர் அமரக்கூடிய வகையில் கலையரங்கம், மிக முக்கியப் பிரமுகர்கள் அமர முகப்பு அறை, மிக முக்கியப் பிரமுகர்கள் உணவருந்த உணவறை, உணவு மையம் மற்றும் நான்கு மின்படிக்கட்டுகள் அமைக்கப்படும். இரண்டாம் தளத்தில் 600 இருக்கைகள் கொண்ட கலையரங்கம், 115 பேர் அமரக்கூடிய வகையில் கூட்டரங்கு அறை, பொழுதுபோக்கு அறை, அடுக்கு அறைகள், படத்தொகுப்பு அறை, ஒலி சேர்க்கை அறை, தகவல் மையம் உணவு மையம், ஓய்வறை ஆகியவையும், மூன்றாம் தளத்தில் 1000 இருக்கைகள் கொண்ட பல்நோக்கு அரங்கம், 115   பேர்  அமரக்கூடிய    வகையில் கூட்டரங்கு கூடம் மற்றும் நவீன சமையல்  கூடம் ஆகியவை அமைக்கப்படும்.  தரைத்தளத்தில் முக்கியப் பிரமுகர்கள் அமர முகப்பு அறை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அறை, பராமரிப்பு அறை, ஓய்வுஅறை, வாகனங்கள் நிறுத்த இட வசதி ஆகியவை அமைக்கப்பட்டிருக்கும்.

மேலும், கலையரங்கம் கட்டப்படவுள்ள கட்டட வளாகத்திலேயே 2 கோடி பொய் செலவில் 10,000 சதுர அடி பரப்பளவில் மாநில செய்தி நிலையம் கட்டப்படவுள்ளது.

இத்தகைய நவீன வசதிகளுடன் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கம் மற்றும் மாநில செய்தி நிலையம் ஆகியவற்றிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், பொதுப் பணித் துறைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் 

ஜெ. குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்