முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் தொகுதியில் 75 கிராமங்களில் ஒரேநாளில் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி, ஜூன்.- 21 - தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்றாம் முறையாக பொறுப்பேற்ற பின்பு தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியில் அரசு விழாவில் பங்கேற்பதற்காகவும் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் மூன்று நாள் சுற்றுப்பயணமாகவும் கடந்த 19ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரெங்கநாதரை வழிபடுவதற்காக கார் மூலம் சென்றார். வழி நெடுகிலும் சுமார் 12 கி.மீ. தொலைவிற்கு அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு வந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து கோவில் வழிபாடு நிகழ்ச்சியினை முடித்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா கார் மூலம் திருச்சி சங்கம் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
மாலையில் மீண்டும் ஓட்டலில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். வழியில் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் புதிய அலுவலகத்தை குத்திவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.மனோகன் எம்.எல்.ஏ., ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பரஞ்சோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற தொகுதிஅலுவலகத்தில் தனது முதல் பணியை துவக்கும் வகையில்  பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். குறிப்பாக வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், ஆகிய கோரிக்கைகளுக்கான மனுக்களை முதல்வர் பெற்றுக்கொண்டார். பின்னர் ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 340 பயனாளிகளுக்கு  பல்வேறு துறை மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாமுடிந்த பின்பு மீண்டும் ஓட்டலுக்கு திரும்பி ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றிய பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு கிராமம் கிராமமாக சென்று நன்றி தெரிவிப்பதற்காக நேற்று மாலை சங்கம் ஓட்டலில் இருந்து புறப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா ஐயப்பன் கோவில், புத்தூர் நால்ரோடு, தென்னூர், தில்லைநகர், கோகினூர் தியேட்டர் கரூர் பைபாஸ் மேம்பாலம் வழியாக திருச்சி-கரூர் ரோடு வழியாக கம்பரசம்பேட்டைக்கு சென்றார்.
முன்னதாக திருச்சி மாநகரில் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் 4 கி.மீ. தூரத்திற்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள், பஸ் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர் ரோட்டில் இருபுறங்களிலும் நின்று முதல்வர் ஜெயலலிதாவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் உற்சாகத்திடன் கையசைத்தனர். முதல்வர் காரில் இருந்தபடியே அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து இரட்டை விரலை காட்டினார். அவரை பார்த்ததும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். வரலாறு காணாத வகையில் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்கு கூட்டம் அலைமோதியது.
அந்த நல்லூர் ஒன்றியத்திற்கு உப்பட்ட கம்பரசம்பேட்டை கிராமத்தில் இருந்து தனது நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை துவக்கும் வகையில் கிராம மக்களிடம் சிறப்புரையாற்றினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முத்தரசநல்லூர், அல்லூர், ஜீயபுரம் வந்தடைந்தார்.
ஜீயபுரம் கடைவீதியில் முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அங்கு பேசி முடித்து விட்டு எலமனூர், திருப்பராயத்துறை, பெருகமணி, சிறுகமணி, கிராமங்கள் வழியாக பெட்டவாய்த்தலை வந்தடைந்தார். அங்கும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். வழி நெடுகிலும் கிராம மக்கள் கைக்குழந்தையுடன் முதல்வரை வரவேற்றனர். வழிநெடுகிலும் முதல்வர் தனது வேனை நிறுத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கம்பரம்பேட்டை முதல் பேட்டவாய்த்தலை வரை 26 கி.மீ. தூரத்திற்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆங்காங்கே ஆராத்தி எடுத்து கிராம மக்கள் வரவேற்றனர். ரோட்டின் இருபுறங்களிலும் அதிமுகவினர் கொடியுடன் திறண்டு வந்து வரவேற்று ஆரவாரம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் முதல்வர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
பெட்டவாய்த்தலையில் இருந்து எட்டரை குழுமுணி ஆகிய கிராமங்கள் வழியாக சோமரசம்பேட்டை வழியாக முதல்வர் ஜெயலலிதா கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 75க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களை சந்தித்து நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
மேலும் நேற்று மட்டும் சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணம் செய்து தொகுதி மக்கள் சந்தித்து நன்றியினை தெரிவித்து கொண்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்