முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிநவீன சிறப்பு மருத்துவமனை தமிழக மக்கள் நலனே தன்னலமாகக் கொண்டு ஜெயலலிதா செயல்படுகிறார்

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

திண்டுக்கல், ஆக.- 22 - சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட இடத்தில் அதிநவீன சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் ஏகோபித்த வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா சாலை ஓமந்தூரான் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கடந்த தி.மு.க. ஆட்சியினரால் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முழுமையாக நிறைவு பெறுவதற்கு முன்பாகவே அதற்கு திறப்பு விழாவையும் நடத்தினார்கள். இக்கட்டிடம் தேவையற்றது. மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார்.  மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமர்ந்தவுடன் புகழ்வாய்ந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் செயல்படுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தீர்க்கதரிசனமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவரது வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது. பிரதான எதிர்க்கட்சியாகக் கூட மக்கள் தி.மு.க.வை அங்கீகரிக்க வில்லை. தமிழக மக்களின் நலனே தன்னலமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா  புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக செலவிடப்பட்ட பல நூற்றுக்கணக்கான கோடி மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது என்பதற்காக அவர் ஆழ்ந்து சிந்தித்துள்ளார். அதன் விளைவாக தொலைநோக்குப் பார்வையுடன்  ஒரு உன்னதமான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியன்று சட்டமன்றக் கூட்டத்தில் வெளியிட்டார்.
புதிய தலைமைச்செயலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஒரு பகுதி மருத்துவக் கல்லூரியாக செயல்படும், மற்றொரு பகுதி மருத்துவ ஆராய்ச்சிக்காக சிறந்த தரத்துடன் அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனை செயல்படும். இந்த மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த வகையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சென்னையில் இயங்கும் என மகத்தான திட்டத்தை அறிவித்தார்.
இதற்கு அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கக் கூடிய உன்னதமான திட்டங்களில் கூட அதில் குறையுள்ளது, இது மக்களுக்கு பலனளிக்காது என சப்பை காரணங்களைக் கூறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இத்திட்டத்தையும் வரவேற்றுள்ளார். குறை சொல்ல வேண்டுமென்பதற்காக அதற்கு வழிகோல் காட்டியவன் நானே என்று கூறி தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டுள்ளார். இத்திட்டம் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் நகர மக்களின் கருத்து
ஜெயகிருபா(25) இல்லத்தரசி.
ஏழை எளிய மக்கள் மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். வளர்ச்சியுற்ற மருத்துவ வசதியை வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஏழை மக்களுக்குக் கிடைப்பதில்லை. தமிழக முதல்வர் அம்மா அறிவித்துள்ள திட்டம் ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மருத்துவக்கல்லூரியின் அறிவிப்பு எதிர்கால நன்மையைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு அமல்படுத்தியுள்ளார்கள். இதற்காகவே அம்மாவிற்கு நன்றி கூற வேண்டும்.
சச்சிதானந்தம்(47).
இத்திட்டம் சூப்பர் திட்டம். வரவேற்கக் கூடிய அறிவிப்பு. என்னைப்போன்ற ஏழைகளுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. அதிநவீன மருத்துவக் கல்லூரிகள் இங்கு ஏற்படுத்தப்பட உள்ளதால் மருத்துவ சிகிச்சைக்கு எளிதாக அமையும். இத்திட்டத்தை யாராலும் குறைகூற முடியாது என்றார்.
கோமதி(29) இல்லத்தரசி.
தமிழக மக்களின் நலனுக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கக் கூடிய திட்டங்கள் அனைத்தும் எங்களைப் போன்ற நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகவே வெளியிடுகிறார். அதேபோன்று தான் தற்போது அறிவித்துள்ள மருத்துவமனையும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். இது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும் என்றார்.
ராஜசேகர்(51) டீக்கடைக்காரர்.
மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது என்பதற்காகவே தமிழக முதல்வர் அறிவித்துள்ள இத்திட்டம் வரவேற்கக் கூடியது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சென்னைக்கு வரவுள்ளதால் இது ஏழை பாமர மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. இத்திட்டத்தில் சுயநலம் கிடையாது. பொதுநலமே மேலோங்கி உள்ளது. இம்மருத்துவமனையினால் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்