முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ.யை பா.ஜ.க.வும் காங்கிரசும் தவறாக பயன்படுத்தியுள்ளன- ஹசாரே குழு

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 12 - ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க.வும் சரி, காங்கிரசும் சரி இருகட்சிகளுமே மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்தி வந்துள்ளன என்று அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.  ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவரக் கோரி பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அப்போது அவரது குழுவைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இதற்கு முன்பு இருந்த பா.ஜ.க. ஆட்சியிலும் சரி, இப்போதுள்ள காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் சரி, இந்த இரு கட்சிகளுமே மத்திய புலனாய்வுத்துறை நிறுவனமான சி.பி.ஐ.யை தங்களது அதிகாரத்தால் தவறாகவே பயன்படுத்தி வந்திருக்கின்றன என்றார். தாஜ் வணிக வளாக முறைகேடுகள் குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதிக்கு எதிராக சி.பி.ஐ. எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியுள்ளது. இப்படி காங்கிரஸ் கட்சியில் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. 2003 ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் மாயாவதி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. 2005 ல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் 2007 ல் மாயாவதி மீது வழக்கு பதிவு செய்ய அப்போதைய கவர்னர் ராஜேஸ்வர் ராவ் மறுத்துவிட்டார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பிறகு ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான பிரதீபா பாட்டீலுக்கு, மாயாவதி ஆதரவு தெரிவித்தார். அதன்பிறகு மாயாவதிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முடித்துக்கொண்டதாக சி.பி.ஐ.  அறிவித்துள்ளது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு மாயாவதி ஆதரவு தெரிவித்தார். இப்படி காங்கிரஸ் தலைமையிலான அரசு சி.பி.ஐ.யை தனது இஷ்டத்திற்கு தவறான முறையில் பயன்படுத்தி வந்துள்ளது என்றும் கெஜ்ரிவால் கூறினார். காங்கிரஸ் மேலிடத்தின் கலாச்சாரம் நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் உண்மையான ஜனநாயக நாட்டிற்கு தேவையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கீழ்மட்ட அரசு ஊழியர்களையும் (சி மற்றும் டி பிரிவு) லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவருவோம் என்று அன்னா ஹசாரேவுக்கு பிரதமர் எழுத்துமூலமாக உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால் அது பின்பற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்