முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல்:நாடாளுமன்ற குழுக்கள் மோதும் அபாயம்

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.- 17 - அலைக்கற்றை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும் பொது கணக்கு குழு, நாடாளுமன்ற கூட்டுக் குழு இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு குழுக்களிலுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் விசாரணை வரம்பு மீறும் போது மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் நிகழ்ந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கை தெரிவித்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு விசாரணை குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முழுவதையும் முடக்கியதோடு பட்ஜெட் கூட்டத் தொடரையும் புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் எச்சரித்தன. 

இதையடுத்து நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அரசு ஒத்துக் கொண்டது. இதன்படி இக்குழுவின் தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் பி.சி. சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் 30 உறுப்பினர்கள் உள்ளனர். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு விசாரணையை தொடங்கி விட்டது. இக்குழுவின் தலைவராக பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளார். 

பொதுக்கணக்கு குழு தனது வரம்பை மீறக் கூடாது என்று பாராளுமன்ற கூட்டு குழு தலைவர் சாக்கோ தெரிவித்துள்ளார். இரு நாடாளுமன்ற குழுக்களும் ஒரே கோணத்தில் விசாரணை நடத்தினால் அது பலனளிக்காது என்று குறிப்பிட்ட நாடாளுமன்ற கூட்டு குழு தலைவர் சாக்கோ, தங்களது விசாரணையின் வரம்பு விரிவானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். எனவே பொது கணக்கு குழு குறிப்பிட்ட முறைகேடுகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இரு குழுக்களும் நடத்தும் விசாரணையில் முரண்பாடு ஏற்படுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார் சாக்கோ. நாடாளுமன்ற கூட்டு குழுவின் முதல் கூட்டம் வருகிற 24 ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது பொது கணக்கு குழு நடத்தியுள்ள விசாரணை விவரங்கள் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்