முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.82.54 கோடி மானியம்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை. ஜன. - 21 - வேளாண் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக ரூ.82.54 கோடியை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுயர்வே நாட்டுயர்வு என்ற ஆன்றோர் மொழிக்கு ஏற்ப தமிழ் நாட்டின் கிராமப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், கடன் அளித்தல், விவசாய விளைபொருட்களை  விற்பனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், இடுபொருள், நுகர்பொருள் ஆகியவற்றை நியாயமான விலையில் விற்பனை செய்தல் ஆகிய பல்வேறு இன்றியமையாப் பணிகளை கூட்டுறவு வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் ஆற்றி வருகின்றன. பொது மக்களிடமிருந்து பெறப்படும் வைப்புத் தொகை மற்றும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியிடம் பெறப்படும் மறு நிதி ஆகியவற்றின் மூலம் பெறும் நிதி ஆதாரத்தினைக் கொண்டு,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் போன்ற பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நிதி உதவி அளித்து வருகின்றன. கிராமப் புறங்களில் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண்  சாரா கடன்கள் வழங்குவதே இச்சங்கங்களின் நோக்கமாகும். விவசாயத்துறையில் இரண்டாம் பசுமைப் புரட்சி ஏற்படுத்த பாடுபடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேளாண் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் நிதிநிலைமை சீராக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, 175 தகுதியுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மானியமாக 30 கோடியே 51 லட்சத்து 51 ஆயிரத்து 222 ரூபாயும், 18 மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக 46 கோடியே 73 லட்சத்து 25 ஆயிரத்து 629 ரூபாயும்,  மற்றும் 53 தகுதி பெறாத தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பாக மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக 5 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரத்து 811 ரூபாயும் என  மானியமாக 82 கோடியே 54 லட்சத்து 57 ஆயிரத்து 662 ரூபாயை விடுவிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மேலும் மேம்பாடு அடையும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்