முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க வாகனத்தில், பச்சை பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்: விண்ணை தொட்ட பக்தர்களின் கோவிந்தா! கோவிந்தா! கோஷம்

வெள்ளிக்கிழமை, 5 மே 2023      ஆன்மிகம்      தமிழகம்
alagar-2023-05-05

மதுரை, பச்சை பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அப்போது பக்தர்களின் கோவிந்தா! கோவிந்தா! கோஷம் விண்ணை தொட்டது.

"கோவில் மாநகர்" என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும் பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 2-ந்தேதி காலை வெகுவிமரிசையாக நடந்தது.

தொடர்ந்து 3-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் நடைபெற்றது. தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் வலம் வந்தன. தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் குவிந்திருந்தனர்.

தேர்கள் நிலைக்கு வந்த பிறகு, அன்றைய தினம் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் ஒரே சப்பரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இந்த ஒரு நாளில் மட்டும்தான். எனவே இதை பக்தர்கள் குடும்பம்-குடும்பமாக கண்டு தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே மதுரை அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது சிகர நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்காக கடந்த 3 நாட்களுக்கு முன் மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

மாலை 6 மணி அளவில் அங்குள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 6.50 மணி அளவில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றி பட்டை, கரங்களில் வளைதடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேள, தாளம் முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

நேற்று முன்தினம் (4-ந்தேதி) மூன்று மாவடியில், மதுரை மக்கள் அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய அழகர், இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அடைந்தார். விடிய, விடிய அழகருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருனார் காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார்.

ஆழ்வார்புரம், வடகரை பகுதியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் பவணி வந்தார். கோவிந்தா...கோவிந்தா... கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வணங்கினர். பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர். வெள்ளிக்குதிரையில் வீரராகப்பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.

முன்னதாக கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சர்க்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி வைகையில் எழுந்தருளும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி மதுரை வந்து சேர்ந்து வைகை ஆற்றில் இறங்குவதே ஐதீகம்.புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்திருந்தனர். அதனால் மதுரை மாநகரம் விழாக்கோலத்துடன் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 13 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 13 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து