முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வைகோவாதம்

புதன்கிழமை, 18 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன.- 18 - தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2010 செப்டம்பர் 28-இல் பிறப்பித்த ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நேற்று (17.1.2012) நீதிபதி லோதா, நீதிபதி கோகலே அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ள வைகோ நேற்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு: ஸ்டெர்லைட் ஆலை கோவா, குஜராத்தில் அனுமதி பெற முடியாமல் மராட்டிய மாநிலத்தில் அந்த அரசு கொடுத்த அனுமதியை மக்கள் போராட்டத்தால் ரத்து செய்து பிறகு தூத்துக்குடியில் இந்த ஆலை 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தேசிய கடல் பூங்கா எனும் 21 தீவுகள் இருக்கின்ற கடற்கரையிலிருந்து 25 கி.மீ.க்கு அப்பால்தான் ஆலையை நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் விதித்த நிபந்தனைப்ைபடி  மீறி இந்த ஆலை அமைக்கப்பட்டதாலும் அதுபோல பசுமை வளாகம் நிபந்தனைப்படி அமைக்கப்படாததாலும் சுற்றுச்சூழலை, நிலத்தை, நீரை, காற்றை மாசுபடுத்துவதாலும் சென்னை உயர் நீதிமன்றம் ஆலையை நிரந்தரமாக மூடிட ஆணை பிறப்பித்தது. இந்த ஆலை தொடர்ந்து இயங்கினால் இலட்சக்கணக்கான மக்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படும். விவசாயம் நாசமாகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்ற கடல் செல்வம் அழிந்து போகும்.
கடந்த 44 மாதங்களாக லைசென்ஸ் இல்லாமலேயே இந்த ஆலை இயக்கப்படுவது சட்டத்திற்கு விடப்படும் சவாலாகும். ஆஸ்திரேலியாவிலிருந்து தாமிர அடர்த்தியை இந்த ஆலை இறக்குமதி செய்கிறது. அதில், பேராபத்தை விளைவிக்கக் கூடிய நச்சு உலோகங்களான யுரேனியம், ஆர்ஸனிக், பிஸ்மத், ஃபுளோரின் பல நூற்றுக்கணக்கான டன்கள் இருப்பதைத் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தூத்துக்குடி சுங்க இலாகா அதிகாரிகளிடம் விவரங்களைப் பெற்று இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன். இந்த ஆலையில் இதுவரை நிர்வாகம் கணக்கிட முடியாத கொள்ளை இலாபத்தைச் சம்பாதித்து இருக்கிறது. அதனாலே ஆலையை மூடிவிட்டு தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும். ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒன்றுதான் அந்தப்பகுதி மக்களைப் பாதுகாக்கும் வழியாகும் என வைகோ எடுத்துரைந்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் ஆலையை இயக்குவதற்கு லைசென்சுக்காக 15 நாட்களுக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், லைசென்ஸ் கொடுப்பதா? இல்லையா? என்பதை நன்கு ஆய்வு செய்து வாரியம் முடிவு எடுக்க வேண்டும் என்றும், அடுத்த விசாரணை 2012 மார்ச் 28-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தனர்.
இந்த வழக்கில் வைகோ உடன் ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் ஜி.தேவதாஸ்  வழக்கறிஞர் டெல்லி ரவி, வழக்கறிஞர் பாலாஜி, வழக்கறிஞர் ஆசைத்தம்பி அவர்களும் ஆஜரானார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி வாதாடினார். என ம.தி.மு.க. செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்