முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்கீல் படுகொலை: மேலும் 2 வக்கீல்கள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - எழும்பூர் வக்கீல்கள் சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஸ்டாலின் என்ற வக்கீல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வக்கீல்கள் சந்தன்பாபு, மைக்கேல் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  தேர்தல் நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 20 வாக்குகள் வித்தியாசத்தில் சந்தன்பாபுவிடம் மைக்கேல் தோல்வியை தழுவினார். வெற்றி பெற்ற சந்தன்பாபு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் கோர்ட்டு வளாகத்திலேயே அவர்கள் வெற்றி ஊர்வலத்தை நடத்தினர்.
 
அப்போது திடீரென மோதல் வெடித்தது. சந்தன்பாபு ஆதரவாளர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதனால் நள்ளிரவில் எழும்பூர் கோர்ட்டு போர்க்களம் போல காட்சி அளித்தது. இதையடுத்து வக்கீல்கள் அனைவரும் சிதறி ஓடினர். ஆனால் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் சந்தன்பாபு ஆதரவாளர்களை விரட்டி விரட்டி தாக்கியது.
 
இந்த தாக்குதலில் சந்தன் பாபுவின் ஆதரவாளரான வக்கீல் ஸ்டாலினின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மின்னல் வேகத்தில் வந்த கல் ஒன்று ஸ்டாலினின் பின் தலையை பலமாக தாக்கியது. இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி கீழே சாய்ந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது.
 
சக வக்கீல்கள் அவரை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஸ்டாலினின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வக்கீல் குட்டியப்பன் எழும்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் மைக்கேல் மற்றும் அவரது ஆதரவாளர்களான லோகேஸ்வரி, ராஜேஷ், நடராஜ், நரேஷ், சார்லஸ், முனியாண்டி மற்றும் 30 பேர் சேர்த்து தாக்கியதில்தான் ஸ்டாலின் உயிரிழந்தார் என்று கூறப்பட்டிருந்தது.
 
இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் ஆபாஷ் குமார், இணை கமிஷனர் ஸ்ரீதர் ஆகியோரது மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. திருவல்லிக்கேணி துணை கமிஷனர் கிரி, எழும்பூர் உதவி கமிஷனர் கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் மதியரசு ஆகியோர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

இதை தொடர்ந்து பெண் வக்கீல் லோகேஸ்வரி மற்றும் ரவுடி முனியாண்டி ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வக்கீல்கள் ராஜேஷ், சார்லஸ் ஆகிய இருவரும் கோயம்பேட்டில் நேற்று கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் கொலை வழக்கில் வக்கீல் மைக்கேல் உள்ளிட்ட மேலும் 33 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இவர்களை பிடிக்க தனிப்படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, தப்பி ஓடிய அனைவரும் கோர்ட்டில் சரண் அடையும் முன்னரே கைது செய்ய திட்டமிட்டுள்ளோம். விரைவில் குற்றவாளிகள் அனைவரையும் பிடிப்போம் என்றார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கோர்ட்டுக்கு விடுமுறை என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இன்று (திங்கட்கிழமை) கோர்ட்டு வழக்கம் போல செயல்படும். அப்போது மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. கொலையுண்ட ஸ்டாலினுக்கு இன்று இரங்கல் கூட்டமும்  நடத்தப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து