முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      தமிழகம்
Ooty 2024-05-04

Source: provided

ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளில் பூத்து குலுங்கிய பூக்களை கண்டு ரசித்து, அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர். புல்தரையில் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து பொழுதை கழித்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து மலர் செடிகளையும், மலர்களையும் பாதுகாக்க பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கோடை சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 10-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து