முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு நடத்திய போட்டியில் 171 பேருக்கு பரிசுகள்: கே.சி வீரமணி வழங்கி பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

தமிழக அரசு நடத்திய போட்டியில் 171 பேருக்கு பரிசுகள்:  கே.சி வீரமணி வழங்கி பாராட்டு
சென்னை, சென்னையில் தமிழக அரசின் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விழாவில் சிறப்பு நூலாசிரியர்கள், பதிப்பகத்தார், மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் என 171 பேருக்கு ரூ 28 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கி அமைச்சர் கே.சி.வீரமணி பாராட்டினார்.

தமிழ்நாடு அரசு சார்பாகச் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விழா, சென்னைப் பல்கலைக் கழகக் கூட்ட அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் . கே.சி. வீரமணி பங்கேற்று, திருக்குறள் முற்றோதல் செய்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 36 மாணவர்களுக்கு ரூ.10,ஆயிரம் - பரிசுக்கான காசோலைகள் வழங்கியும், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை,பேச்சுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கியும், தமிழில் 36 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தார்கள் என மொத்தம் ரூ.28,லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள பணப் பரிசுகளை 171 பேருக்கு வழங்கியும் விழாச் சிறப்புரையாற்றினார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது மக்கள் நலன் கருதி நல்ல பலத் திட்டங்களை நாள்தோறும் அறிவித்தும் செயற்படுத்தியும் வரும் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் சிந்தனைகள், அறநெறிக் கருத்துக்கள், எங்களை வழிநடத்திச் செல்லும் எங்களின் ஆதாரங்களாகும்.

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பெற்ற அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டார் மக்களின் முதல்வர் அம்மா. அவரது சிறப்புமிக்க சிந்தனையில் சிறந்தோங்கிய இந்த சித்திரைப் புத்தாண்டு விழா பழந்தமிழ்ப்பெருமையை போற்றச் செய்கிறது எனலாம்.தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு என்ற வள்ளுவனின் சிந்தனையை தனது மேலோங்கிய செயல்பாட்டால் செயல்படுத்தி வருகிறார் எங்களின் மக்கள் முதல்வர் ஜெயலலிதா .
பேரறிஞர் அண்ணாவும் எம்.ஜி.ஆரும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார்கள். உலகத் தமிழறிஞர்கள் போற்றுகின்ற அளவில் எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தி இயல், இசை, நாடகம் என்று முத்தமிழோடு அறிவியல் தமிழையும் கொண்டு வந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்ததோடு தில்லி தமிழ்ச் சங்கத்திற்கும் புத்துயிர் ஊட்டி பெருமை சேர்த்தவர் எங்களின் மக்கள் முதல்வர் ஜெயலலிதா.

உலகத்தின் எந்த மூலையிலும் தமிழர்கள் இன்னல்பட்டாலும் முதல் குரல் கொடுத்தவர், கொடுப்பவர் எங்களின் மக்கள் முதல்வர் ஜெயலலிதா, .அன்றைய ஆட்சியாளர்கள் தமிழைச் செம்மொழி என்ற பெயரிட்டு ஒட்டு மொத்தமாக குடும்பத்தோடு கோவையிலே கும்மாளம் அடித்ததை எக்காலமும் தமிழறிஞர்கள் மறக்க மாட்டார்கள். தமிழகத்தின் வாழ்வாதாரத்தை விட்டுக் கொடுத்தவர் அன்றைய முதலமைச்சர். அதைப் பெற்றுத் தந்தவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதா . அனைத்துத் துறைகளிலும் அன்னைத் தமிழ் ஓங்கி வளர்ந்திட நாம் அனைவரும் உழைத்திட இந்நாளில் உறுதி ஏற்போம் என்று கூறினார்.

முன்னதாக, வரவேற்புரையாற்றிய தமிழ் வளர்ச்சி- செய்தித்துறைச் செயலாளர் மூ.இராசாராம் பேசுகையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் சித்திரையில் கொண்டாடப்படுவது திராவிடப் பண்பாடு ஆகும். அதனால்தான், தமிழர்கள் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட, சில தினங்கள் முன்போ பின்போ ஆந்திர, கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தவர் """"யுகாதி"" என்றும் """"விஷு"" என்றும் புத்தாண்டைக் கொண்டாடி வரவேற்கிறார்கள். இதைப் போலவே, பிகார், ஜார்க்கண்ட், காஷ்மீர், மகாராஷ்டிரம், கோவா, வங்காளம், அசாம், பஞ்சாப், ஹரியானா, மணிப்பூர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சித்திரை மாதத்தை ஒட்டியே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

இந்தியா முழுவதும் இந்தப் பருவத்தில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே அடையாளமாக திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த உத்தம சோழரின் செப்பேடுகளும், முதலாம் குலோத்துங்கரின் கல்வெட்டுகளும் சோழநாட்டின் கோயில்களில் சித்திரைத் திருவிழா எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதை அறியத் துணைபுரிகின்றன. அந்தக் காலத்தில் சித்திரைத் திருவிழாவிற்காகச் சிறப்புக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழ்மொழி கிரேக்கத்தைவிடப் பண்பட்டது. இலத்தீனைவிட அழகானது. ஆங்கிலத்தைவிட ஆற்றல் வாய்ந்தது. இத்தாலிய மொழியைவிட இனிமையானது. எபிரேயத்தைவிடப் பழமையானது என்றெல்லாம் பிற நாட்டு மொழி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

விழாவில், முன்னாள் அரசவைக் கவிஞர் . முத்துலிங்கம் தலைமையில் ‘தாயே தமிழே’ எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இக்கவியரங்கில் கவிஞர் சினேகன், கவிஞர் கவிதாசன், கவிஞர் தங்க காமராசு, கவிஞர் பா.கிருஷ்ணன், கவிஞர் மலர்விழி, கவிஞர் சி. ரேகா மற்றும் செல்வன் கோ. மணிகண்டன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.

அதனைத் தொடர்ந்து கலைமாமணி கு. ஞானசம்பந்தன் தலைமையில் நாடு போற்றும் நான்காண்டு ஆட்சியில் விஞ்சி நிற்பது தமிழ் வளர்ச்சியா? தமிழக வளர்ச்சியா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இப்பட்டிமன்றத்தில் தமிழ் வளர்ச்சியே என்ற தலைப்பில் கவிஞர் தங்க மூர்த்தி, பேராசிரியர் அர்ச்சனா கார்த்திகேயன், கவிஞர் மலர்விழி ஆகியோரும் தமிழக வளர்ச்சியே என்ற தலைப்பில் கவிஞர் கோவேந்தன், பேராசிரியர் விசயசுந்தரி, பேராசிரியர் விமலா அண்ணாதுரை ஆகியோரும் பேசினார்கள்.விழாவின் நிறைவாக, தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு. சேகர் நன்றி கூற நாட்டுப்பண்னுடன் விழா இனிதே நிறைவுற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து