முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒருநாள் போட்டி: டெல்லியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

புதன்கிழமை, 19 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கிறது.

டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி அதை தொடர்ந்து தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதேபோல இன்றைய ஆட்டத்திலும் இந்திய வீரர்களின் அதிரடி தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தர்மசாலா போட்டியில் வெற்றிக்கு பந்துவீச்சு முக்கிய பங்கு வகித்தது. ஹர்த்திக் பாண்ட்யா அறிமுக ஆட்டத்திலேயே 3 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். சுழற்பந்தில் அமித் மிஸ்ரா ஆதிக்கம் செலுத்தினார். பேட்டிங்கில் வீராட் கோலி நல்ல நிலையில் உள்ளார். அவர் 85 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். சேசிங்கில் அவர் உலகின் தலை சிறந்த வீரராக ஜொலிக்கிறார். ரகானே, ரோகித்சர்மா, கேப்டன் டோனி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். வைரஸ் காய்ச்சல் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத சுரேஷ் ரெய்னா இன்றைய போட்டியிலும் ஆடவில்லை. 11 பேர் கொண்ட இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் நியூசிலாந்து அணி இருக்கிறது. கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் டெய்லர் ஆகியோர் தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால் அந்த அணியின் பேட்டிங் பலவீனமாக இருக்கிறது. முதல் போட்டியில் லாதம் மற்றும் பவுலர் சவுத்தி ஆகியோர் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதனால் இன்றைய போட்டியில் அந்த அணி வீரர்கள் பேட்டிங்கை பலப்படுத்திக்கொள்ள கடுமையாக போராடுவார்கள்.இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகள் மோதிய போட்டியில் இந்தியா 47 ஆட்டத்திலும், நியூசிலாந்து 41 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இன்றைய ஆட்டம் பகல்-இரவாக பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா வீரர்கள் விவரம்:
டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, ரகானே, வீராட்கோலி, கேதர் ஜாதவ், மனிஷ்பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா, அக்‌ஷர்பட்டேல், அமித் மிஸ்ரா, பும்ரா, உமேஷ்யாதவ், மன்தீப் சிங், குல்கர்னி, ஜெயந்த் யாதவ்.

நியூசிலாந்து வீரர்கள் விவரம்:
வில்லியம் சன் (கேப்டன்), குப்தில், லாதம், ரோஸ் டெய்லர், ஆண்டர்சன், ரோஞ்சி, ஜேம்ஸ் நீசம், சான்ட்னெர், பிரேஸ்வெல், சவுத்தி, சோதி, போல்ட், மேட் ஹென்றி, ஆண்டன் டேவிச், வாட்லிங்.

9 ஆயிரம் ரன்னை நெருங்கும் டோனி :

இந்திய அணி கேப்டன் டோனி 9 ஆயிரம் ரன்னை நெருங்கி உள்ளார். அந்த ரன்னை எடுக்க அவருக்கு இன்னும் 61 ரன் தேவை. 35 வயதான டோனி 2004-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 279 ஆட்டத்தில் விளையாடி 8939 ரன் எடுத்துள்ளார். சராசரி 51.08 ஆகும். 9 சதமும், 60 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 183 ரன் குவித்து உள்ளார். 9 ஆயிரம் ரன்னை எடுக்கும் 5-வது இந்தியர் என்ற பெருமையை டோனி பெறுவார். இதற்கு முன்பு தெண்டுல்கர், கங்குலி, டிராவிட், அசாருதீன் ஆகியோர் 9 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்