முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக் கடலில் 'கியான்ட்' புயல்: ஒடிஷா, வட ஆந்திர மீனவர்களுக்கு எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'கியான்ட்' என பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இந்தப் புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் 'கியான்ட்' தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

"மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு 'கியான்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது போர்ட் பிளேருக்கு வடக்கே - வட மேற்கே 620 கி.மீ., கோபால்பூருக்கு தென் கிழக்கே 710 கி.மீ, விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 850 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு நோக்கி நகரும். இருப்பினும், இந்தப் புயல் கரையை கடக்காமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்தப் புயலால் ஒடிசா, வடக்கு ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஒடிசா, வடக்கு கரையோர ஆந்திரா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கியான்ட்' புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, எண்ணூர், பாம்பன், நாகப்பட்டினம், தூத்துக்குடி துறைமுகங்களிலும் புதுச்சேரி துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்