சிவகங்கையில் காவலரை வெட்டிய ரவுடி சுட்டுக்கொலை

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      சிவகங்கை
siva

சிவகங்கை. சிவகங்கையில் காவலரை வெட்டிய ரவுடி சுட்டுக்கொலை. சமூகவிழாவின் பாதுகாப்புக்காக சென்ற எஸ்.ஐ. ஆல்வின் சுதனை திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த ரவுடிகள் குத்திக் கொலை செய்தனர். இதைத்தொடர்ந்து அப்போது மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த வெள்ளத்துரை தலைமையிலான டீம் கொலையாளிகள் மூவரையும் சுட்டுகொன்றது. அதற்கு பின் சிவகங்கை மாவட்டத்தில் ரவுடியிசம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் சமீபகாலமாக சமூக விரோதிகள் மீண்டும் பல குற்ற செயல்களில் ஈடுபட, சிவகங்கை மாவட்டம் மீண்டும் குற்ற தேசமாக மாறிப்போனது. இந்த நிலையில்தான் இன்று காலை கார்த்திகைசாமி என்பவரை என்கவுன்டரில் போலீஸ் போட்டுத்தள்ளியுள்ளது. இதனால் சிவகங்கை வட்டாரம் பதற்றத்துக்குள்ளானது.

ரவுடிக்கும்பல்

இது பற்றி கூறிய காவல்துறையினர், நேற்று அதிகாலையில் மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் ரவுடிக் கும்பல் ஒன்று வாகனத்தில் வந்தது. வருகிற வழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கேட்ட பங்க் ஊழியரை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றது. உடனே இச்சம்பவம் போலீஸ் கவனத்துக்கு வர, உயர் அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் லோக்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த சிவகங்கை காவல்துறையினர் கொள்ளை கோஷ்டியை மடக்கினர். பயங்கர ஆயுதங்களுடன் இருந்த ரவுடிகும்பல், வேல்முருகன் என்ற போலீஸ்காரரை கடுமையாக அரிவாளால் வெட்டியது. இன்னும் இரண்டு காவலர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. வேல்முருகனுக்கு கை சுண்டுவிரலிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டது. தாக்கிவிட்டு ரவுடி கும்பல் தப்பி ஓடிவிட்டது. போலீஸார் தாக்கப்பட்டது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அதிகாரிகள் விரைந்து வந்து அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்தனர்.

என்கவுன்டர்

மானாமதுரை அருகே புதுக்குளம் முந்திரிதோப்பில் அவர்கள் பதுங்கியுள்ளதை கண்டுபிடித்த போலீஸார் அங்கு அவர்களை பிடிக்க சுற்றி வளைத்தனர். அங்கும் போலீஸ் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர். அதற்குபிறகு வேறு வழியில்லாமல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார்த்திகை சாமி என்ற ரவுடி கொல்லப்பட்டார்" என்கிறார்கள்.

32 வழக்குகள் நிலுவை

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை எஸ்.பி. ஜெயச்சந்திரன், தற்பாதுகாப்புக்காகத்தான் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் ரவுடி கார்த்திகைசாமி காயமடைந்ததும், அவரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். இங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த கார்த்திகை சாமி மீது மதுரை, திருப்பூர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை என 32 வழக்குகள் உள்ளன" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: