முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களின் மனுக்களை பரிசீலிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், ஆண்டான்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன ஆண்டான்கோவில் கிழக்கு, கரூர் பாலிடெக்னிக், ஆண்டான்கோவில் புதூர், கோவிந்தாம்பாளையம் போன்ற பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உரிய துறை அலுவலர்களிடம் பிரித்து கொடுத்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

 

கோரிக்கை மனுக்கள்

 

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவுப்படி, ஊராட்சி வாரியாக பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்காக வாரத்தில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வாரத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்டம், மாதத்தில் ஒரு நாள் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் 253 பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியும், ரூ.24,000 கோடி கல்விக்காக நிதி ஒதுக்கி மாணவ, மாணவிகளுக்கு கணினி முதல் காலணி வரை கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி வருகிறார்கள்.

மேலும், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறிகளை 100 சதவீதம் வழங்கியதுடன் ஏழைப்பெண்களின் திருமணத்திற்காக 4 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கியதை தேர்தல் வாக்குறுதியில் 8 கிராம் வழங்கப்படும் என்பதையும் நிறைவேற்றி வருகிறார். ஏழைப்பெண்களின் பொருளாதாரத்தை பெருக்குவதற்காக விலையில்லா ஆடுகளை வழங்கி வருகிறார். அவ்வாறு வழங்கிவரும் திட்டங்களில் பிற மாநிலங்கள் வியக்கும் வண்ணம் முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம் என பல்வேறு திட்டங்கள் வழங்கிவருவது மட்டுமின்றி தற்போது ஏழை தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக பராமரித்திட அம்மா குழந்தைநல பரிசுப்பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆண்டான்கோவில் கிழக்கு ஊராட்சியில் தாழ்வான மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. காவிரி குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. நீண்டகாலமாக பொதுமக்களின் கோரிக்கையான புதிய நியாயவிலைக்கடை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிக்கொடுக்கப்படும். ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சியான ராஜீவ்காந்தி மற்றும் சஞ்சீவ காந்தி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பட்டா வழங்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், தனி வட்டாட்சியர் ரவிச்சந்திரன், இரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் திருவிக, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்