முக்கிய செய்திகள்

மெல்ல கற்கும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      மாணவர் பூமி
manaver

Source: provided

விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2016-17) அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களில் அரையாண்டுத் தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்களில் 4 அல்லது 5 பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் 12ம் வகுப்பில் 5 அல்லது 6 பாடங்களில் தேர்ச்சி பெற்றிடாத மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விருதுநகர், திருவில்லிப்புத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்களிலும் 4 மையங்களை ஏற்படுத்தி சிறப்பு பயிற்சி அளித்து அம்மாணவர்களை விடுதி போல் உணவு வழங்கி அங்கேயே தங்க வைத்து இப்பயிற்சி நடத்தப்படுகின்றது. இதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு அவர்கள் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் மிகுந்த சிரமத்திற்கும் பணிச்சுமைக்கும் இடையில் இச்சீரிய முயற்சியை தமிழகத்திலேயே முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்தில் எடுத்துள்ளார்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் டாக்டர் ஏ.புகழேந்தி அவர்கள்.

நோக்கம்

பள்ளிகளில் இம்மாணவர்களுக்கு இதுமாதிரியான கடைசி நேரத்தில் தனிக்கவனம் செலுத்துவதில் உள்ள சிரமங்களை அறிந்து இம்மாணவர்களுக்கு தன்நம்பிக்கையை ஊட்டி, ஆர்வத்தை கூட்டி கவனத்தை படிப்பின் மீது செலுத்த தேவையான சூழலை உருவாக்கி அம்மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கையை எடுப்பது அதன்மூலம் அம்மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உயர் கல்வியை தொடர வைத்து, இடைநிற்றல் இல்லா மாவட்டமாக இம்மாவட்டத்தை மாற்றவும் அம்மாணவர்கள் வாழ்வில் வளம் பெற வைப்பது தான் முக்கிய நோக்கமாகும் மேலும் இப்பயிற்சி மூலம் மாணவர்களுக்கு எளிமையான முறையில் திறன் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கி அம்மாணவர்களின் தேர்ச்சியை உறுதிப்படுத்துவதன் மூலம் மாவட்டத் தேர்ச்சியையும் உயர்த்துவது என்பதும் அடிப்படை நோக்கமாகும்.

பயிற்சிக்கான இடங்கள்

விருதுநகர் மாவட்டம் விருதுநகர், திருவில்லிப்புத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்களை கொண்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி மாணவர்களையும் ஒரே இடத்தில் தங்க வைப்பதில் உள்ள சிரமங்களை உணர்ந்த முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், மாவட்டத்தில் 4 இடங்களில் இப்பயிற்சியை ஆரம்பித்திருக்கின்றார்கள். அதாவது திருவில்லிப்புத்தூர் கல்வி மாவட்டத்தில் 80 மாணவர்களுக்கு திருவில்லிப்புத்தூர் சி.எம்.எஸ் பள்ளியிலும் , விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 150 மாணவர்களுக்கு கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியிலும் , அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 80 மாணவர்களுக்கு நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் மற்றும் குலசேகரநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

பயிற்சியின் தன்மை

திருவில்லிப்புத்தூர் மற்றும் விருதுநகரில் நடைபெறுகின்ற பயிற்சி மையத்தில் மாணவர்கள் தங்கி பயிற்சியை மேற்கொள்கின்றனர். காலை 5.00 மணிக்கு எழுந்திருக்க வைப்பது 6 மணிவரை யோகா பயிற்சியும் அதைத் தொடர்ந்து 7 மணிவரை வாசிப்பு. பின்னர் காலை 9.30 மணி முதல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். காலை வேளையில் ஒரு பாடத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். 1 மணி நேரம் பாடம் சம்பந்தமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பின்னர் மாணவர்களை 1 மணி நேரம் படிக்கவைப்பது, பின்னர் 1 மணி நேரம் தேர்வு வைத்து எழுத வைப்பது, இதே போல் மாலை வேளையிலும் வேறு ஒரு பாடத்திற்கு இது மாதிரியான பயிற்சி வழங்கப்படுகின்றது. இம்மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகள் மாணவர்களுக்கு எளிமையாகவும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடத்தில் திறன் வாய்ந்த அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு வழங்கப்படுவதால் அம்மாணவர்கள் விரும்பி கற்க முன்வருகின்றனர். ஒரே மாதிரியான மீத்திறன் உடைய மாணவர்களாக இருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பயிற்சி தேவைப்படுகின்றது. அத்தகைய பயிற்சி சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் மாலையில் மாணவர்களுக்கு 4.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். 5 மணிக்கு சிற்றுண்டியாக பாசிப்பயிறும், சுண்டல் வழங்கப்படும் பின்னர் மாலை 6 மணிவரை விளையாட அனுமதிக்கப்படுகின்றது. பின்னர் 6.30 மணி முதல் 8.00 மணிவரை வாசிப்பு வகுப்புகள் ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெறும், பின்னர் இரவு உணவு 8.45 மணிவரை வழங்கப்படும். அதன் பின்னர் 9.00 முதல் 10.00 மணி வரை மீண்டும் வாசிப்பு வகுப்பு ஆசிரியர்களின் மேற்பார்வையில். இரவு 10.00 மணி படுக்கைக்குச் செல்லுவர். உடன் ஆசிரியர்களும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களும் தங்கி மாணவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.

மெல்ல கற்கும் மாணவர்களான இவர்கள் சேட்டைகளிலும் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். ஆனால் இப்பயிற்சிக்கு பின்னர் அவர்களின் நடவடிக்கையில் நிறைந்த மாற்றத்தை காண முடிகின்றது. அம்மாணவர்களுக்கு படிப்புடன் கூடிய ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் இப்பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படுகின்றது.

இத்தகைய அரிய சிறப்பு வாய்ந்த பயிற்சிகளை இம்மாவட்டத்தில் 30க்கும் அதிகமான தன்னார்வமிகுந்த, பொது நல நோக்கம் கொண்ட தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் , கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்போடு முதன்மைக்கல்வி அலுவலர் டாக்டர் ஏ.புகழேந்தி அவர்களின் சீரிய தலைமையில் நடைபெற்று வருவது இம்மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்பது திண்ணம். உண்மையில் விருதுநகர் மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியான மாவட்டம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் என்பது உண்மை.

இதை ஷேர் செய்திடுங்கள்: