முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் அரசு விருதுக்கு தேர்வு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      நீலகிரி

கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

                                    கலை விருதுகள்-

தமிழ்நாட்டில் கலைப்பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் கலை மன்றங்கள் வாயிலாக கலைத்துறையில் சாதனை படைத்த 18 வயது அதற்கு உட்பட்டோருக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதினருக்கு கலைவளர்மணி விருதும், 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு கலை சுடர்மணி விருதும், 51 வயது முதல் 60 வயது வரையுள்ளோருக்கு கலை நன்மணி விருதும், 61 வயதுக்கு மேற்பட்டோருக்கு கலை முதுமணி விருது என வயதுக்கு தக்கவாறு விருதுகள் வழங்க உத்தரவிட்டுள்ளது.

                                        தேர்வுக்கூட்டம்

கலை விருதாளர்கள் தேர்வுக்கூட்டம் ஊட்டியில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலை பண்பாட்டுத்துறையின் உறுப்பினர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முகமது ரசூல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆர்.குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் மா.ராஜன், கலை ஆர்வலர்கள் சுந்தர், கலை நன்மணி வாசமல்லி, கலை சுடர்மணி பிரகாஷ், கலை வளர்மணி சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு கலை விருது பெறுபவர்களை தேர்வு செய்தனர்.

                               கலைஞர்கள் தேர்வு

இதில் கலை முதுமணி விருதுக்கு ஓவியர் பாலசுப்பிரமணியன், கவிஞர் அய்சானுல்லா, வயலின், கீபோர்டு கலைஞர் அந்தோணி ஜெயராஜ், கலைஞர் ராஜேஸ்வரி ரங்கசாமி ஆகியோரும், கலை நன்மணி விருதுக்கு நாடக கலைஞர் கணேஷ், இசை அமைப்பாளர் சுந்தர்ராஜன், கோத்தர் இசை கலைஞர் உதயகுமார், ஆர்மோனிய கலைஞர் ராஜேந்திரகுமார், கருவி இசை கலைஞர் தங்கவேல், தோடர் இசைக்கலைஞர் அதிஷ்டமல்லி, பரதநாட்டிய கலைஞர் பவானி விசுவநாதன், கலை சுடர்மணி குரலிசை கவிஞர் முரளி, பாடகர் உதயதேவன், தபேலாக் கலைஞர் விஸ்வநாதன், குரலிசை கவிஞர் பிரேம்குமார் ஆகியோரும், கலைவளர்மணி விருதுக்கு மிருதங்க கலைஞர் சரத்பாபு, பலகுரல் கலைஞர் வினு, பரதநாட்டிய கலைஞர் நிவேதிதா, ஓவியம் கார்த்திக் ஆகியோரும், கலை இளமணி விருதுக்கு ஓவியம் மாசிய செரீன், பரதநாட்டியம் பாரதி ரமேஷ், ஓவியர் இனியவன், பரதநாட்டியம் தீபிகா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டுள்ள கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெற உள்ள விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்