முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி-வக்கீல்கள் குழு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகை தந்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் ஜெ.ஆனந்தவள்ளி தலைமையிலான வழக்கறிஞர்கள் ஆணையர் குழு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிகளின் நிலைகுறித்து  பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்திட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் ஜெ.ஆனந்தவள்ளி தலைமையில், வழக்கறிஞர்கள் கே.சஞ்சய்காந்தி, பி.சோனாஅழகேசன், எம்.எஸ்.ஜெயகார்த்திக், சரவணன் ஆகியோர்களை உள்ளடக்கிய வழக்கறிஞர்கள் ஆணையர் குழு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

முதலாவதாக, பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், கீழப்பார்த்திபனூர் ஊராட்சி பகுதிக்குட்பட்ட கொத்தங்குளம் ஊரணி, கொத்தங்குளம் அய்யானர்கோவில் ஊரணி, இடையர்குடியிருப்பு ஊரணி, தர்மர் த.பெ.இருளன் இடையர்குடியிருப்பு  (தனியார் இடம்), மேலச்சீவன்குளம் கண்மாய், பெருங்கரை ஊராட்சிக்குட்பட்ட திருவரங்கி ஊரணி, கொம்பூதி கண்மாய் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிகளின் நிலை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

அதனைத்தொடர்ந்து கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பொன் ஊராட்சி பகுதிக்குட்பட்ட பசும்பொன்கண்மாய், ஆண்டிச்சிஊரணி, கொலிச்சிஊரணி, தவசிக்குறிச்சி கண்மாய், சடையனேந்தல் ஊராட்சி பகுதிக்குட்பட்ட நெடுங்குளம் கண்மாய், பழுவூர் கண்மாய், பழுவூர் அய்யனார்கோவில் அருகில், உடையநாதபுரம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட உடையநாதபுரம் கண்மாய், அபிராமம் பேரூராட்சிக்குட்பட்ட முதுகுளத்தூர் ரோடு இஸ்மாயில் காம்ப்ளக்ஸ், முதுகுளத்தூர் ரோடு ரைஸ்மில் கீழ்புறம், முதுகுளத்தூர் ரோடு பம்ப்ரூம் அருகில், உரப்பூங்கா எதிரில் உள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிகளின் நிலை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.  

இந்;த ஆய்வின்போது, பணிகளை முற்றிலுமாக நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் கால அவகாசம் குறித்து அந்தந்த பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களிடத்தில் கேட்டறிந்தார்கள்.  மேலும் தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து அகற்றிடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அவ்வாறு உரிமையாளர்கள் அகற்றாத பட்சத்தில் மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அரசு நடவடிக்கையின் மூலம் உடனடியாக அகற்றி அதற்கான செலவினத் தொகையினை இருமடங்காக சம்மந்தப்பட்ட உரிமையாளர்களிடம் வசூலித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்து பொதுமக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் ஜெ.ஆனந்தவள்ளி அலுவலர்களிடத்தில் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லதுரை, உதவி ஆணையர் (கலால்) அமிர்தலிங்கம், கமுதி வட்டாட்சியர் லெட்சுமணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரராகவன் (பரமக்குடி), எம்.இராதாகிருஷ்ணன் (கமுதி), செயல் அலுவலர் ராஜாராம் (அபிராமம்) உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்