முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்காவுக்கு அடிக்கல்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      சென்னை

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா பட்டுப் பூங்காவுக்காக அடிக்கல்லை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நாட்டினார். ரூ.83.83 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் தொழில் துறையின் மூலமாகச் செயல்படுத்தப்பட உள்ளது.ஜெயலலிதா அறிவித்த திட்டம்: கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்வர் ஜெயலலிதாவால் பட்டுப் பூங்கா திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த பட்டுப் பூங்காவை அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. 10 ஆயிரம் பேர் பயன்பெறுவர்: காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிர் கிராமத்தில் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தப் பட்டுப் பூங்கா அமைப்பதற்கான மொத்த திட்ட மதிப்பீடான ரூ.83.83 கோடியில், 9 சதவீதத் தொகையான ரூ.7 கோடியே 54 லட்சத்தை மானியமாக தமிழக அரசு அளிக்கும். இந்த பட்டுப் பூங்கா, பட்டு சேலைகள் உற்பத்தி செய்வதற்கான தறிக்கூடங்கள், பட்டு நூலை சாயமிட தேவையான சாயச்சாலைகள், வடிவமைப்பு மையம், பரிசோதனைக்கூடம், பயிற்சி மையம், மருந்தகம், பொதுவசதி மையம், சில்லறை விற்பனை நிலையம், கண்காட்சியறை, மூலப்பொருட்களை சேர்த்து வைப்பதற்கான மையம் போன்ற அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும். இந்த பட்டுப் பூங்கா அமைப்பதற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தண்ணீர் வசதி, கழிவுநீர் வசதி, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற அனைத்து வசதிகளும் தமிழக அரசால் வழங்கப்படும். இந்த பட்டுப் பூங்கா உருவாவதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரம் பட்டு நெசவாளர்கள் பயன்பெறுவர் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்