சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் 48 பணிகள் 3.1 கோடி மதிப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது: கலெக்டர் வா.சம்பத், தகவல்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      சேலம்
1

 

சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழக முதலவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்து திட்டப்பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று(10.03.2017) கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இது குறித்து கலெக்டர் தெரிவித்ததாவது : 2016-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தவறியதால் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியினை சமாளிக்கும் பொருட்டு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், நீர் ஆதாரப்பணிகளை மேற்கொள்ளவும் ஏற்கனவே தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கிய பணியாக நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி இவ்வறட்சியினை எதிர்கொள்ளவும், மழை நீரை திறம்பட சேமித்தும், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளில், ரூபாய் 10 இலட்சத்திற்கும் குறைவான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் பணிகள் விவசாய சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பின் மூலம் நேரடி நியமன அடிப்படையில் அவர்களாலேயே மேற்கொள்ளப்படும். இப்பணிகள் பொதுப்பணித்துறையால் திட்டம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களால் செயல்படுத்தப்படும். பணிகள் பொதுப்பணித்துறையால் கண்காணிக்கப்படும். ரூபாய் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணிகள், நீர்வள ஆதாரத்துறையின் மூலம் நடைமுறையில் உள்ள ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். மொத்த மதிப்பீட்டில் 10 சதவீத மதிப்பீட்டுத் தொகை பாசன சங்கங்களிலிருந்து உழைப்பாகவோ அல்லது பொருளாகவோ அல்லது பணப்பங்களிப்பாகவோ பெறப்பட்டு பணிகளை அவர்களே மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 30 மாவட்டங்களில் 1519 பணிகள் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்டம் நாமக்கல் மூலமாக 18 பணிகள் 1.6 கோடி மதிப்பிலும் மேட்டூர் அணை கோட்டத்தின் மூலம் 30 பணிகள் 1.5 கோடி மதிப்பிலும் என மொத்தம் 48 பணிகள் 3.1 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்டம் நாமக்கல்ளில் 87 ஏரிகளும் மேட்டுர் அணை கோட்டத்தில் 15 ஏரிகளும் என மொத்தம் 105 ஏரிகள் 100 ஏக்கருக்கு மேல் பாசன வசதியுடன் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் 48 ஏரிகள் கலிங்கு சீரமைத்தல், மதகு சீரமைத்தல், வரத்து வாய்கால் தூர்வார்தல் மற்றும் ஏரிக்கரை பல படுத்தல் ஆகிய பணிகள் பொதுப்பணி துறையின் மூலம் மெற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல் படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், மேட்டூர் சார் ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொறுப்பு) குமரேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இரஜேந்திரன், பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், இள நிலைப்பொறியாளர் பாலசுப்ரமனியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: