முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்

திங்கட்கிழமை, 29 மே 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிப்புத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர்  கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை காண்போம்.

சிரிப்பு என்பது மகிழச்சியின் வெளிப்பாடு ஆனந்தத்தின் குறியீடு, மனம் மகிழ்ச்சியாக இருப்பதை முகச்சிரிப்பு வெளிக்காட்டும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த பண்பு சிரிப்பு, மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். "எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எனக்குப் பிடிக்கும். நகைச்சுவை உணர்வு மட்டும் என்னிடத்தில் இல்லாதிருந்தால் நான் என்றோ இறந்திப்பேன்" என்றார் மகாத்மாகாந்தி இதயநோய் உள்ளவர்கள் தினமும் 15 நிமிடங்கள் சிரிப்புக்காக செலவிடலாம் என்று மேரிலாண்ட் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து தகவல் தந்துள்ளது.

 

இதய நோயாளிகளில் 60 சதவீதம் பேர் வாய்விட்டு சிரிக்கத் தெரியாதவர்கள்தான். வாய்விட்டு சிரிப்பதன் மூலம் முகத்தில் பொலிவும் கண்களில் ஒளியும் காந்தமும், தெளிவும் உண்டாகும்.

நுரையீரல் முழுமையாக விரிந்து நமக்கு தேவையான பிராண சக்தியை முழுமையாகக் கிடைக்கச் செய்யும் இருதயம் சிறப்பான முறையில் வேலை செய்யும், வயிற்றில் ஜீரண சக்தி துரிதமாக நடைபெறும். சிறுநீரக செய்லபாடும் நன்கு அமையும், நரம்பு மண்டலத்தில் புத்துணர்ச்சி ஏற்படும். தொண்டைப் பிரச்சனைகள், வாய்வுத் தொந்தரவுகள், மலச்சிக்கல் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும். அடிக்கடி சிரிப்பதால் ரத்தத்தில் "கார்டிசால்" "எபிநெப்ரின்" மற்றும் "எண்டார்பின்" உற்பத்தியாகி மன அழுத்தத்தை நீக்குகிறது.

பண்டைக் காலங்களில் அரசர்கள் மன இறுக்கம் இல்லாமல் இருப்பதற்காக அரசவையில் "விதூஷகன்" என்னும் விகட கவிகளை வைத்திருந்தார்கள். அவர்கள் தங்களுடைய நகைச்சுவை உணர்வால் சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றி சகஜ நிலைக்குக் கொண்டு வரும் பணிகளைச் செய்தார்கள். கிருஷ்ணதேவராயர் அரச சபையை அலங்கரித்த அஷ்டதிக் கஜங்கள் எனப் படுவோரில் விகடகவியாகத் திகழ்ந்த தெனாலி ராமனுக்கு சிறப்பான இடம் உண்டு. நல்ல நகைச்சுவை கொண்டவன் தான் சிறந்த ஆளுமை படைத்தவனாக இருப்பான். கடுமையான போராட்டங்களையும், பெரும் மன உளைச்சல்களையும் ஒரே ஒரு சிரிப்பு வென்றுவிடும்.

ஜப்பானில் வாழ்த்து கொண்டிருக்கும் 120 வயதுள்ள மூதாட்டியை தொலைக்காட்சியில் பேட்டி கண்டபோது தான் 120 ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் நான் நகைச்சுவையைப் பெரிதும் விரும்புவது தான் சத்தம் போட்டு சிரிப்பேன் என்றார். சிரிப்பும், சந்தோஷமும் நோயாளிகள் குணம் அடைவதைத் துரிதப்படுத்தும் என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். உலகில் சிரிப்பு சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது. நமது நாட்டில் உள்ள நகைச்சுவை மன்றங்களைப் போல அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிரிப்பு மருத்துவமனைகளை அமைத்துள்ளார்கள்.

ஜப்பானில் சிரிக்கும் புத்தர் என்று ஒருவர் இருந்தார். அவருடைய உண்மையான பெயர் ஹோட்டோ என்பதாகும். அவர் எப்போதும் வாய் திறந்து பேசமாட்டார். மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று வயிறு குலுங்கும்படி தனியாகச் சிரிக்க ஆரம்பித்து விடுவார். அவர் நிறுத்தாமல் சிரிப்பதைப் பார்த்து மற்றவர்களும் தாங்களாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார். சிரிக்கும் பொழுது மூளையிலுள்ள ஒரு லட்சம் மைல் நீளமுள்ள ரத்தக்குழாய்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறு. கன்னத்துத் தசைகள், இருதய தசைகள் இதனால் ரத்த சுற்றோட்டத்தில் எளிதாக பராமரிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் பிரபல பத்திரிக்கையாளர் கொவ்சின். அவருக்கு முதுகுத்தண்டில் வலி ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்டும் நோய் குணமாகத் தாமதமானது. பழைய சினிமா புரஜெக்டர் ஒன்றை வாங்கி தன் வீட்டில் வைத்து அதிக சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவைப் படங்களை தினமும் பார்த்து தன்னை அறியாமல் வாய்விட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார். அந்த படங்களைப் பார்க்கும் நேரங்களில் தன் முதுகு வலியை மறந்தார். விரைவில் குணம் அடைந்தார் என்று அமெரிக்கப் பத்திரிக்கையில் செய்தி வெளியானது.

சிரித்த முகத்துடன் உள்ளவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு கூடும். நகைச்சுவை ததும்ப பேசுபவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். நீங்களும் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு எந்த விஷயத்தையும், நகைச்சுவையோடு பேசக் கற்றுக்கொள்ளுங்கள் நகைச்சுவை நூல்களை அதிகம் படியுங்கள். அழுது கொண்டே பிறக்கும் குழந்தைகளும் சிரிக்கக் கற்றுக்கொண்டு தினமும் 400 முறைகள் சிரிக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் சராசரியாக தினமும் 20 தடவை தான் சிரிக்கிறார்கள். அனைவரும் மனம் விட்டு சிரிப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் நோயற்ற வாழ்வும் நீடித்த ஆயுளும் பெறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து