தடைகளை தகர்க்கும் தன்னம்பிக்கை – உன்னை உயர்த்தும்

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      மாணவர் பூமி
self-confidence

Source: provided

தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இதைச் செய்துமுடிக்க முடியுமென்று நம்புவதும், நம்பிக்கையைச் செயல்படுத்த திட்டமிடுவதும், அதை நிறைவேற்ற முயற்சி செய்யும்போது தடைகளைக் கண்டு தளர்ந்துவிடாமல், விடாமுயற்சியுடன் அந்தக் காரியத்தைச் சாதிக்கும் திசை நோக்கி முன்னேறுவதும்தான் தன்னம்பிகை.  தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழி காட்டும் ஒளிவிளக்கு.

“ஒல்வது அறிவது அறிந்து அதன்கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்” – திருக்குறள்

ஒருவர் தன் வலிமைக்கு ஏற்றதை அறிந்து, அதில் உறுதியாக செயல்படும்போது அவரால் முடியாதது எதுவும் இருக்காது. “முயன்றால் முடியாதது எதுவும் இல்லை”, “முயற்சி திருவினை ஆக்கும்”, முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்” என்பவைகள்தான் தன்னம்பிக்கையின் மூல மந்திரங்கள் ஆகும். பொதுவாக கால்நடைகள் குட்டிகளை ஈன்றவுடன் பிறந்த குட்டிகள் தடுமாறி எழுந்து நின்று தன்னம்பிக்கையுடன் நடக்க ஆரம்பித்துவிடுகின்றன. அதுபோல் பறவையினங்களின் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் நடக்க ஆரம்பிக்கின்றன.

மனிதனின் குழந்தைப்பருவத்தில் நடக்க ஆரம்பிக்கும்போது முதலாவது அடி எடுத்துவைக்கும் போதே விழுந்துவிடுவோம் என்ற பயஉணர்வை மீறி அடி எடுத்து வைக்கின்றான். அப்படிப்பட்ட குழந்தையை ஓரடி ஈரடியாக காலடி எடுத்துவைக்கச் சொல்லி அக்குழந்தையின் மனதில் தன்னம்பிக்கையை ஊட்டி உன்னால் நடக்க முடியும் என்று நடை பயில வைப்பதிலும் பேச கற்றுக்கொடுப்பதிலும் காணலாம். 

குழந்தைப்பருவத்தில் தாயின் அரவணைப்பில் இருந்த குழந்தைகள் பள்ளிக்குச் சென்றவுடன், தன்னம்பிக்கையை வளர்ப்பவர்கள் அவர்களின் ஆசிரியர்கள் தான்.  பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்துக் கூறுகின்ற நம்பிக்கை ஒளி மிகுந்த சொற்கள், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. மாணவப்பருவத்தில் மாணவர்கள் படிக்கும் நல்ல நூல்கள், மாமனிதர்களின் வரலாறுகள், அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.  அதுபோல் விளையாட்டு ஆசிரியர் தரும் பயிற்சி விளையாட்டு திறனை வளர்க்கிறது.  ஓவிய ஆசிரியர் தரும் பயிற்சி அவர்களது கலைத்திறனை வளர்க்கிறது.  பள்ளியில் தங்கள் அறிவாற்றல் திறனை அறிந்தும் வளர்த்தும் தன்னம்பிக்கை பெறுவது போலவே மாணவர்கள் தங்கள் பலத்தை தாங்களே உணர்ந்து கொள்ளச் செய்யும்படியான செயல்கள் மூலமாகவும் அவர்களை தன்னம்பிக்கையை வளர்க்கப்படுகிறது.

வலை பின்னும் சிலந்தி தனக்குரிய வலையைப் பின்னி முடிப்பதற்குள் எத்தனை முறை வலை அறுந்தாலும் அது திரும்ப திரும்ப முயற்சி மேற்கொள்வதை பார்த்திருப்போம்.  அந்தச் சிலந்திக்கு சோர்வோ அலுப்போ ஏற்படுவதில்லை. திரும்பத்திரும்ப நூல் அறுபடும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வலையை பின்னிக்கொண்டே இருக்கும். அந்த வலை பின்னி முடிக்கும்வரை அது ஓய்வதில்லை.


மனித வாழ்க்கையில் வளர்ச்சி என்பது வட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வந்த இடத்துக்கே வருவதல்ல.  சுழன்று சுழன்று செல்லக் கூடிய சுழலேணி வளர்ச்சி.  இந்தச் சுழலேணியின் படிகளில் தொடர்ந்து மேலேறிச் செல்ல ஒருவருக்கு தன்னம்பிக்கை வேண்டும்.  அதுவே வாழ்கை மேம்பாடடையும் என்ற நன்னம்பிக்கையும் தரும்.  இந்த நன்னம்பிக்கையும் தன்னம்பிக்கையும் சேர்ந்திருந்தால் ஞாலம் கருதினும் கைகூடும். ஞாலத்தை வெல்ல “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு” காத்திருத்தல் வேண்டும். 

இந்தக் காத்திருத்தல் என்பது சும்மா இருப்பதல்ல, செயல்படுவதாகும்.  செயல்படுவது மந்தகதியில் இருந்து விடக்கூடாது.  விரைந்தும், தெளிந்தும், தன்னம்பிக்கையோடும் செயல்படவேண்டும். தாவரங்களுக்கு உயிர் உண்டு, உணர்ச்சி உண்டு என்றார், வங்காளத்தைச் சேர்ந்த சர்.ஜெகதீச வி.சந்திரபோஸ். 1907 ஆம் ஆண்டு லண்டனில் ராயல் சொஸைட்டியில் உரையாற்றும் போது தனது விஞ்ஞான கண்டுபிடிப்பை வெளியிட்டார்.  தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

எனினும், அவர் சோர்ந்து போய்விடவில்லை.  இந்தியாவுக்குத் திரும்பியதும் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார்.  தனது ஆராய்ச்சிக்கு தேவையான நுட்பமான கருவிகளை உருவாக்கி தாம் கண்டறிந்த விஞ்ஞான உண்மைகளை உறுதி செய்து கொண்டார்.  பிறகு மீண்டும் லண்டன் சென்றார்.  இப்போது அவரது கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர்.  கடினமான உழைப்பும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுமே அவரிடம் இருந்தது.  அதனால் அவர் வெற்றியாளராக வலம் வந்தார்.

உள்ளத்தில் அச்சமற்ற தன்மை உருவாக்க தன்னம்பிக்கை வலுப்பெற நமது தமிழக முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஞானி-சுண்டெலி கதை ஒன்றை கூறியிறுக்கிறார். கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது.  மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது.  வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அதுபோல் சிந்தனை இல்லாவிட்டால், வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.  சிலர் தேவையற்ற அச்சத்திற்கு ஆளாகி, மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள்.  இந்த வீண் பயத்தை போக்கி துணிச்சலுடன் செயல்பட்டால், வாழ்வில் வெற்றி நிச்சயம்.

ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது.  சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.  பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது.  என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது, ஞானி முன் நின்றது.  பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார்.  என்னை எப்போதும் நாய் துரத்துகிறது.  என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை.  உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது.  இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கோட்டார் ஞானி.  புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது.  தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய்.  ஞானி நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழிந்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகின்றான்.  தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுங்கள் என்றது புலி.  உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான்.  இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி.  எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான்.  உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது.  உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது.  நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.  உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள்.  நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.  உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து