சினை ஆடுகள் மற்றும் குட்டிகள் பராமரிப்பு

புதன்கிழமை, 7 ஜூன் 2017      வேளாண் பூமி
goat with pets

Source: provided

ஆட்டுப்பண்ணை இலாபகரமாக இருப்பது ஆடுகளின் இனவிருத்தி மற்றும் உற்பத்தித்திறனை பொறுத்துதான் அமைகின்றது என்று கூறினால் அது மிகையாகாது.  இதில்  முதன்மையாக திகழ்வது இனவிருத்தி. சரியான காலங்களில் இனவிருத்திக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட காலங்களில் தரமான குட்டியை ஈனச் செய்வதன் மூலம் தான் லாபகரமான பண்ணை அமையும். ஆகவே சினைப்பட்டு கருவுற்ற காலங்களில் பெட்டை ஆடுகள் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

சினைப்பட்டு கருவுற்ற ஆடுகளின் முதல் மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சினைப்பட்ட ஆடுகளை நீண்ட நேரம் நேரிடையாக கடுமையான சூரிய வெளிச்சத்தில் இருக்கச் செய்வது, மேய்ச்சலுக்காக நீண்ட தூரம் நடத்தி எடுத்துச் சென்று ஆடுகளுக்கு மிகுந்த சோர்வு ஏற்படச் செய்வது, ஆடுகளை மேய்ச்சலுக்காக விரட்டி அங்கும் இங்கும் ஓட்டிச் செல்வது மற்றும் அதிக எண்ணிக்கை ஆடுகளை குறைந்த இடவசதி உள்ள பட்டிகளில் அடைத்து வைப்பது போன்ற காரணங்களினால் உடல் கூறு செயல்பாடுகளில் மாறுபாடு ஏற்பட்டு, உண்டான கரு அழிய வாய்ப்பு உள்ளது. ஆகவே சினைப்பட்டு கருவுற்ற சில தினங்களுக்கு இளம் வெயில் நேரங்களில் மேய்ச்சலுக்கு எடுத்துச் சென்று மேய்ப்பது, வெயில் நேரங்களில் குளிர்ச்சியான நிழல் கொடுத்து நல்ல போதுமான காற்றோட்டமான இடவசதி அளிப்பது, தேவையான அளவு தண்ணீர் கொடுத்து சரியான தீவனப்பராமரிப்பு கொடுப்பதன் மூலம் ஆடுகளில் ஆரம்ப காலத்தில் ஏற்படக் கூடிய கருச்சிதைவைக் கட்டுப்படுத்தலாம்.

முன்பருவ சினைக் காலம் :  முன்பருவ சினைக் காலங்களாக கருதப்படுவது கருவுற்றதில் இருந்து முதல் 100 நாட்களாகும். இக்காலத்தில் ஆடுகளின் முழு தீவனத் தேவையை பூர்த்தி செய்வது மேய்ச்சல் தரையே ஆகும்.  ஆகவே, நல்ல தரமான மேய்ச்சல் தரையாக இருக்கும் நிலையில் எளிதில் ஜீரணிக்ககூடிய தரமான மேய்ச்சல் கிடைக்க  வாய்ப்புள்ளது.  இக்கால நிலையில் ஆடுகளின் பராமரிப்புக்கு தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கை மற்றும் ஆடுகள் பராமரிப்பில் ஏற்படும் செலவையும் குறைத்து வருமானத்தை கூட்ட வழி வகை செய்து கொடுக்கின்றது.  தேவையான சரியான தீவனம் கிடைக்கும் நிலையில் ஆடுகளின் உடல் நலம் பாதுகாக்கப்பட்டு தாயின் வயிற்றில் குட்டிகளின் வளர்ச்சியும்  சிறப்பானதாக காணப்படும்.

தரமற்ற மேய்ச்சல் தரையாக இருக்கும் நிலையில் ஆடுகள் தீவனத்தேவையை பூர்த்தி செய்து கொள்ள நிலத்துடன் ஒட்டி கிடைக்கக்கூடிய புல், பூண்டு மற்றும் விஷச் செடிகளையும் சேர்த்து உண்ண தூண்டப்படுகின்றது.  இத்தகைய தரமற்ற மேய்ச்சல் தரையால் ஆடுகளுக்கு தேவையான தீவன சத்துக்கள் பூர்த்தி செய்ய இயலாமல் ஆடுகளின் உடல் பராமரிப்பு பாதிப்பதுடன் குட்டிகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகின்றது.  மிகவும் மோசமான நிலையில் மேய்ச்சல் தரை இருக்கும் காலகட்டத்தில் ஆடுகள் தீவனத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள விஷச் செடிகள் மற்றும் நிலத்துடன் ஒட்டி உள்ள தீவனப் புல்லை மண்ணுடன் சேர்த்து உண்பதால் ஆடுகளின் உடல்நிலையில் அயர்ச்சி மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டு சினை ஆடுகளில் குட்டி வீச்சும், ஆடுகளின் உடல் நலம் பாதிப்பும் ஏற்படும்.

ஆகவே தரமற்ற மேய்ச்சல் தரையின் மூலம் ஆடுகள் தீவனத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள இயலாத நிலையில் ஆடுகளின் உடல் பராமரிப்பு மற்றும் குட்டிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சரியான தீவனம் கிடைக்க வழிவகை செய்து கொடுத்தல் அவசியம்.  இதன் மூலம் ஏற்படக்கூடிய இழப்பை தடுத்து லாபத்தை ஈட்ட வழிவகுத்துக் கொடுக்கும்.

சினை ஆடுகளின் எடை கூடும் திறன் :  இனவிருத்தி செய்யப்பட்டு கருத்தரிக்கப்பட்ட ஆடுகளின் எடை மாதமாதம் கூடுதலாகி கொண்டு இருக்க வேண்டும்.  சராசரியாக கருதரிக்கப்பட்டஆடுகளின் உடல் எடை 5-6 கிலோ அளவிற்கு கருத்தரித்ததில் இருந்து குட்டி ஈணுதல் வரை கூடி காணப்படும். இம்மாறு எடை கூடுதல் பலவகை காரணங்கள் கொண்டு மாறுபடும்.  அதாவது இனம், வயது, கருவின் வளர்ச்சி, ஈற்றுநிலை, கருவின் எண்ணிக்கை, பராமரிப்பு தன்மை போன்றவற்றை கொண்டு மாறுபடும்.

இளம் வயதில் கருத்தரிக்கப்பட்ட ஆடுகளின் வளர்ச்சியும் கருவின் வளர்ச்சியும் ஒருங்கே நடைபெறும்.  ஆகவே, இளம் வயதில் கருத்தரிக்கப்பட்ட ஆடுகளுக்கு ஆடுகளின் உடல் பராமரிப்பிற்கும், வளர்ச்சிக்கும் மற்றும் கருவின் வளர்ச்சிக்கும் சேர்ந்து தீவனம் கொடுக்க வேண்டும். வளர்ச்சி பெற்ற ஆடுகள் கருத்தரிக்கும்போது அதனுடைய உடல் பராமரிப்பு மற்றும் குட்டிகளின் வளர்ச்சிக்கு மட்டும் தீவனம் கொடுத்து பராமரித்தால் போதுமானது. சினை ஆடுகளின் உடல்நலன் மற்றும் குட்டிகளின் வளர்ச்சியினை சினை ஆடுகளின் வெளித்தோற்றத்தை வைத்து ஓரளவிற்கு கணிப்பு செய்யலாம். அதாவது ஆடுகள் கருவுற்ற முதல் மாதத்தில் ஆடுகளை பிடித்து ஆடுகளின் விலா எலும்புகளுக்கும், தண்டுவட எலும்புகளுக்கும் இடையே கை வைத்துப் பார்க்கும்போது எலும்புகள் எளிதாக தட்டுப்படும்.  இந்நிலையே கருவின் வளர்ச்சி நாட்கள் கூட இருக்குமாயின் ஆடுகளின் பராமரிப்பு சரியாக இல்லையென்பதை நிரூபணம் செய்கின்றது. ஆகவே, இந்நிலை மாறுபட குட்டியின் சரியான வளர்ச்சிக்கும், ஆடுகளின் உடல் பராமரிப்பிற்கும் ஏற்ற தீவனத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். சினைப்பட்ட ஆடுகளை தரம்  வாரியாகப் பிரித்து தீவனம் கொடுக்க வேண்டும்.  அப்போதுதான் அனைத்து ஆடுகளுக்கும் தேவையான தீவனம் சரியாக கிடைக்கும்.

பின் பருவ சினை கால பராமரிப்பு : கருவுற்ற முதல் 3ல் இருந்து 5 நாட்கள் எவ்வாறு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றதோ அதுபோலவே கர்ப்ப காலத்தின் கடைசி 30 - 45 நாட்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.  கருவுற்ற ஆடுகளின் கரு வளர்ச்சி முதல் 100 - 120 நாட்கள் வரை மிகவும் மெதுவாக நடைபெறும்.  சினை காலத்தின் கடைசி 30 - 45 நாட்களில் 60 - 80 சதவிகித வளர்ச்சி தரிதமாக நடைபெறும்.  ஆகவே, இக்கால கட்டத்தில் ஆடுகளுக்கு தேவையான அளவு தரமான புரதம் நிறைந்த புல் மற்றும் பயறு வகை தீவனத்துடன் தேவைக்கு ஏற்ப கலப்பு தீவனம் 100 -1 50 கிராம் கொடுப்பதன் மூலம் ஆடுகளின் உடல் நலன் பாதுகாப்பதுடன் குட்டிகளின் வளர்ச்சியும் சீரிய முறையில் காணப்படும். சரியான பராமரிப்பு இல்லாத காலத்தில் ஆடுகள் உடல் நலன் பாதிக்கப்பட்டு குறை பிரசவ குட்டிகள் அல்லது குறைந்த பிறப்பு எடையுள்ள மெலிந்த குட்டிகள் பிறக்கும். மேலும், ஆடுகளில் பால் உற்பத்தியும் குறையும்;. இதனால் குட்டிகளின் வளர்ச்சி குன்றி, இறப்பை தழுவ வேண்டிய நிலை ஏற்படும்.

 சினை ஆடுகளுக்கு புரதம் மற்றும் தாது உப்புத்தேவையை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியமானது.  சினை ஆடுகளுக்கு இதர தீவனத்துடன் தினம் நல்ல தரமான புரதம் நிறைந்த பயறுவகை பசுந்தீவனத்தை 1 - 2 கிலோ அளவிற்கு குறைவில்லாமல் கொடுத்தல் வேண்டும்.

தண்ணீர் : ஆடுகளின் தண்ணீர் தேவையானது தீவன முறை, மேயக்கூடிய புல்லின் தன்மை மற்றும் பிறசுற்றுப்புற சீதோஷண நிலை போன்றவற்றைப் பொருத்து மாறபடும் நன்கு வளர்ந்த இளம் புற்களை தீவனமாக கொடுக்கும்போது இத்தகைய புற்களில் நீர் அளவு அதிகம் இருப்பதால் தண்ணீர் தேவை சற்று குறைந்து காணப்படும். குறைவான தண்ணீர் குடிக்கும் காலங்களில் உண்ணக்கூடிய தீவனத்தின் அளவும் குறைந்து மாறுபட்டு காணப்படும்.
 ஆகவே, சினை ஆடுகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குளங்களில் தண்ணீர் எடுத்து கொடுக்ககூடிய நிலையாக இருப்பின் பாதுகாப்புடன் குளங்களை வைப்பதுடன் அதில் உள்ள நத்தை போன்றவற்றை அழித்து அப்புறப்படுத்தி ஆடுகளுக்கு உடல் நல தீங்கு நேரா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தாது உப்பு : தாது உப்பு ஆடுகளின் வளர்ச்சி, உற்பத்தி சினை தருணத்தை வெளிபடுத்தல், கருவளர்ச்சி, பால் உற்பத்தி போன்ற அனைத்து கால நிலைகளுக்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பொதுவாக இத் தாது உப்புகளின் தேவை மனிதனால் உருவாக்கப்பட்ட நல்ல நிலையில் பராமரிக்கும் மேய்ச்சல் தரையில் கிடைக்க கூடிய புல் மற்றும் பயறுவகை தீனவங்களில் இருந்தே ஒர் அளவிற்கு சரிசெய்யப்பட்டு வருகிறது. ஆனால் இயற்கையாகவே மண்ணின் தன்மை பாதிக்கப்ட்டடு தாமிரம், கோபால்ட் போன்ற தாது உப்புக்கள் கிடைக்காத நிலையில் தாது உப்புக் கலவையை ஆடுகளுக்கு கிடைக்கச் செய்வது மிகவும அவசியம்.

 பொதுவாக ஆடுகளின் தாது உப்பு பற்றாக்குறையை ஆடுகளின் செயல்பாடுகளில் இருந்து ஒர் அளவிற்கு ஊகிக்க முடியும். ஆடுகளை மேய்ச்சலுக்காக திறந்துவிடும் போது மண், மணல் போன்றவற்றை நக்கி சுவைப்பது மேலும், கொட்டகையில் அடைத்து வைக்கும் போது கொட்டகை சுவர்களை நக்கி சுவைப்பது போன்ற அறிகுறிகள் மூலம் தாது உப்பு பற்றாக்குறையை வெளிபடுத்தும், இக்கால நிலையில் ஆடுகளுக்கு தாது உப்புக்கலவையை தீவனத்துடனும் சேர்த்து கொடுத்தும் அல்லது தாது உப்பு கலவை கட்டிகளை கொட்டகையின் பல இடங்களில் கட்டி தொங்கவிடுவதன் மூலமும் தாது உப்பு பற்றாக்குறையுள்ள ஆடுகள் நக்கி சுவைப்பது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும்.

 தாது உப்புக் கலவையை தீவனத் தொட்டிகளில் கொட்டி வைக்கும் போது அதிக ஈரத்தன்மை இருப்பின் தாது உப்பு கலவைத்துகள்கள் ஒன்று சேர்ந்து கட்டி போல் ஆகி ஆடுகள் சரியாக பயன்படுத்த முடியாமல் போகலாம். ஆகவே, முடிந்த அளவிற்கு தாது உப்புக் கலவையை தீவனத்துடன் சேர்த்து கலந்து அனைத்து ஆடுகளுக்கும் கிடைக்கும்படி வைப்பது சிறந்தது. ஆகவே, சினை ஆடுகளின் உடல் பராமரிப்பிற்கும் குட்டிகளின் சரியான வளர்ச்சிக்கும் பால் உற்பத்திக்கும் குட்டி போட்ட ஆடுகளின் உடல்நலன் பாதுகாப்பிற்கும் தாது உப்புக்களை சரியான அளவு கிடைக்க வழிவகை செய்து கொடுக்கவேண்டும்.

நோய்த் தாக்கம் :   ஆடுகளுக்கும் நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரி தாக்குதல்களினால் பல வகையான நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இதனால் ஆடுகளின் வளர்ச்சித்திறன் பாதிப்படைவதுடன் சினை ஆடுகளின் குட்டி வீச்சு, குட்டிகள் பிறக்குமாயின் மெலிந்த குட்டிகள், குட்டி ஈன்ற ஆடுகளின் பால் இல்லாமை போன்றவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 ஆகவே, ஆடுகளை தாக்ககூடிய நோய்களில் இருந்து காக்க உரிய தடுப்பூசி செலுத்தி வரும் நோயை கட்டுப்படுத்துவதன் மூலம் உற்பத்தி நிலையை மேன்மை அடைய செய்து தரமான குட்டிகளை பெறலாம்.

ஒட்டுண்ணி தாக்கம்  :   ஒட்டுண்ணி தாக்குதல் சினை ஆடுகளில் ஏற்படும்போது இரத்த சோகை உண்டாகுதல் குட்டி வீச்சு, பால் உற்பத்தி குறைதல் போன்றவற்றை ஏற்படுவதுடன் சினை ஆடுகளின் உடல் நலன் பாதிக்கப்பட்டு இறப்பையும் உண்டாக்க காரண கர்த்தாவாக திகழ்கின்றது. ஆகவே சரியான மருந்தினை கொண்டு உரிய காலங்களில் குடல் நீக்கம் செய்தல் மூலம் ஆடுகளின் ஏற்படும் கருச்சிதைவு, இரத்தச் சோகை போன்றவற்றைக் கட்டுப்படுத்தி தரமான குட்டிகளை ஆடுகளில் இருந்து பெறமுடியும்.

சினை ஆடுகளின் இதர பராமரிப்பு :   சினைப்பட்ட ஆடுகளில் இருந்து கிடாய்களை பிரித்து தனித்து வைக்க வேண்டும. இதர கால்நடைகளுடன் ஆடுகளை சேர்த்து மேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் மேய்ச்சல் போட்டியின் காரணமாக இடிபட வாய்ப்பு உள்ளது. இதனால் கருசிதைவு, ஆடுகளில் இறப்பு போன்றவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோலவே நாய் போன்ற விலங்கினத்தின் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பது அவசியம். மேய்ச்சல் பகுதியில் கட்டி ஈனும் போது நாய்களினால் குட்டி மற்றும் குட்டி ஈன்ற ஆடுகளுக்கு தொந்திரவு ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆகவே, கவனத்துடன் இருப்பது நலம்.

 சினை ஆடுகளை குளிப்பாட்டும் போது கவனத்துடன் கையாள வேண்டும், தவறுதலாக அல்லது ஆடுகளை மிகவும் விரட்டி பிடித்தாலும் சினை ஆடுகளின் உடல்நலன் பாதிப்பு கருசிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேற்கூறிய முறைகளை சினை ஆடுகள் பராமரிப்பில் கடைப்பிடிக்கும் நிலையில் ஆரோக்கியமான நிலையில் ஆடுகளை வைத்து நல்ல தரமான குட்டிகளையும் பெற இயலும் என்பது நிச்சயம்.

தொடர்புக்கு: கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614625, தஞ்சாவூர் மாவட்டம்.
தொகுப்பு: மு.வீரசெல்வம், கோ.ஜெயலட்சுமி, சோ.யோகேஷ்பிரியா, சு.கிருஷ்ணகுமார் மற்றும் ப.செல்வராஜ்

Chilli Mushroom 65 | Mushroom recipes | Fried Mushrooms | Samayal in Tamil | Veg Recipes

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

ஆண்டு முழுவதும் வருமானம் தரும் தென்னை சாகுபடி

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து