Idhayam Matrimony

தமிழகத்தில் வறட்சியிலும் எழுச்சிபெற்ற பேரீச்சை உற்பத்தியில் விவசாயி சாதனை

புதன்கிழமை, 5 ஜூலை 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடுமையான வறட்சி ஏற்பட்ட நிலையிலும், தென் இந்தியாவிலேயே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பேரீச்சை பழம் உற்பத்தியில் தனி முத்திரை பதித்து சாதனை படைத்து வருகிறார்.

உலக அளவில் இங்கிலாந்து, கலிபோர்னியா, இஸ்ரோல், அபுதாபி ஆகிய நாடுகளில் மட்டுமே அதிகளவு பர்ரி பேரீச்சை உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தாவரவியல் ஆய்வுக்கூடங்களில் திசுமூலமாக உற்பத்தி செய்து, பல்வேறு நிலைகளில் சுமார், 3 ஆண்டுகள் வரை ஆய்வகத்தில் வளர்க்கப்படுகிறது. பின்னர், சீதோஷ்ன இயற்கைக்கு ஏற்ப பக்குவப்படுத்தி ஓராண்டு வரை பசுமை குடிலில் வளர்க்கப்பட்டு, நன்கு திரட்சியான பிறகே செடிகள் விற்பனைக்கு வருகிறது. அதை வாங்கி நடவு செய்த இரண்டு ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். தொடங்கி முதல் வருடத்திலேயே ஒவ்வொரு செடியிலும் முதல், 50 கிலோ வரை காய்க்கும். மூன்றாண்டு பருவத்தில், 100 கிலோ வரையும், ஐந்தாண்டு பருவத்தில், 100 கிலோ முதல், 300 கிலோ வரை காய்க்கும் தன்மை கொண்டது.

மேலும், பேரீச்சை பழங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், அஜ்வால், பர்ரி பேரீச்சை அதிக சதைப்பற்றும், ருசித்தன்மையும் உள்ள முக்கிய ரகங்களாக உள்ளன. இதுபோன்ற பேரீச்சை ரகங்கள் வெளிநாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த, 23 ஆண்டுகளாக தமிழகத்தில், தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்து அரியகுளத்தை சேர்ந்த நிஜாமுதின் விவசாயி ஒருவர் பேரீச்சை பழம் உற்பத்தியில் ஈடுபட்டு தனிமுத்திரை பதித்துள்ளார்.

இது குறித்து விவசாயி நிஜாமுதின் கூறியதாவது: தென் இந்தியாவிலேயே முதன்முதலில், தருமபுரி மாவட்டம், அரியகுளம் பகுதியில் தான் பேரீச்சை உற்பத்தி துவங்கப்பட்டது. கடந்த, 1982 முதல், 1990 வரை சவுதிஅரேபியாவில், வேளாண் பயிற்சிகூடத்தில் பணியாற்றி வந்தேன். பின்னர், இடையில் அரியகுளம் பகுதியிலுள்ள என்னுடைய சொந்த நிலத்தில் பர்ரி பேரீச்சை செடி நாற்றுவிடப்பட்டு மீண்டும், சவுது அரேபியாவிற்கு சென்றேன். அதைதொடர்ந்து, இங்கு 1991ல் பேரீச்சை செடி நடவு செய்யும் பணியை துவங்கினேன். தற்போது, ஒரு ஏக்கருக்கு, 76 செடிகள் நடப்பட்டு, 13 ஏக்கரில், 630 பேரீச்சை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கான உற்பத்தி செலவும் குறைவு தான். சென்றாண்டு மட்டும், 15 டன் பேரீச்சை உற்பத்தி செய்யப்பட்டது. இது ஒவ்வொறு ஆண்டும் உற்பத்திறன் பெருகிகொண்டே இருக்கும்.