சென்னை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு ஊழியர் ஏகராஜ் குடும்பத்திற்கு ரூ 13 லட்சம் : முதல்வர் எடப்பாடிஅறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017      தமிழகம்
cm palanisamy(N)

சென்னை : சென்னை  பேக்கரி உணவகத்தில்  ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு ரூ 13 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும்,  சிறப்பு நிகழ்வாக  அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு: சென்னை மாவட்டம், பெரம்பூர் வட்டம், மீனாம்பாள் சாலை, சிட்கோ நகர் மெயின் ரோடு சந்திப்பு, கவியரசு கண்ணதாசன் நகரில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான  உணவகத்தில், கடந்த 15 ம்தேதி நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், மூடியிருந்த உணவகத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், சுமார்  48 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியையும், இதில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பலனின்றி தீயணைப்புத் துறை வீரர் ஏகராஜ் என்பவர்

உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். பணியிலிருக்கும்போது காலமான  ஏகராஜின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சென்னை மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவத்  துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் உயரிழந்த ஏகராஜ் குடும்பத்தினரை நான்  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். மேலும், கீழ்பாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு உயரிய சிகிக்சையை அளிக்குமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.  இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஏகராஜ் குடும்பத்திற்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயும், கருணைத் தொகையாக 10  லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 13 லட்சம் ரூபாயும் மற்றும் சிறப்பு நிகழ்வாக அரசுப்பணி  வழங்கவும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும்; சாதாரண  காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண  நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து