முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காங். தலைவராக குஷ்பு நியமிக்கப்படுவாரா?: கட்சி மேலிடம் பரிசீலனை

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவரை புதியதாக நியமிப்பது பற்றி ராகுல்காந்தி யோசித்து வரும் நிலையில், அப்பதவிக்கு நடிகை குஷ்புவை நியமிக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தமிழக காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு புதிய மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை கட்சி தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் மீது டெல்லி மேலிடத்தில் சில புகார்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகம் தொடர்பாக கட்சியின் பொருளாளர் வோரா விசாரணை நடத்தி தமிழக காங்கிரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அறக்கட்டளையை மேற்பார்வையிட கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். செக் பரிவர்த்தனை முழுவதும் அவரது மேற்பார்வையிலேயே நடைபெறுகிறது. இந்த நிலையில் காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிப்பது பற்றி ராகுல் காந்தி தீவிரமாக யோசித்து வருகிறார். தலைவர் பதவியை தக்க வைக்கும் நோக்கில் திருநாவுக்கரசர் டெல்லியில் காய்களை நகர்த்தி இருக்கிறார். ராகுல் காந்தியையும் சந்தித்து பேசி இருக்கிறார். அது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை.

முன்னாள் தலைவர் இளங்கோவனுடன் ராகுல் காந்தி நீண்ட நேரம் ஆலோசித்து இருக்கிறார். குஷ்புவையும் சந்தித்து தமிழக நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் சில முக்கிய நிர்வாகிகளை ராகுல் அழைத்து பேசி வருகிறார். புதிய தலைவருக்கான பட்டியலில் இளங்கோவன், குஷ்பு, அழகிரி, செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. குஷ்புவிடம் இதுபற்றி கட்சி மேலிடம் கேட்டபோது மேலிடம் என்ன பணி தந்தாலும் செய்ய தயார் என்று கூறியதாக கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில் இளங்கோவனை தலைவராக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இளங்கோவனுக்கு தலைவர் பதவி வழங்க ப.சிதம்பரமும் ஆதரவு தெரிவித்துள்ளாராம். இளங்கோவனுக்கு வழங்காதபட்சத்தில் தனது ஆதரவாளரான கே.எஸ்.அழகிரிக்கு தலைவர் பதவி வழங்கலாம் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். மாணிக்கம்தாகூர், ராகுலுடன் நேரடி தொடர்பில் இருப்பவர். அதேபோல் செல்லக்குமாரும் டெல்லி தலைவர்களுடன் தொடர்பு கொண்டவர்தான். இவர்களில் யாரை தலைவராக நியமிக்கலாம் என்பது பற்றி மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. காங்கிரசுக்கு நேரடி எதிரி கட்சியான பா.ஜனதாவுக்கு மாநில தலைவராக பெண் இருப்பதால் காங்கிரசும் பெண் தலைவராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் குஷ்புவை நியமிக்கலாம் என்ற கருத்து குஷ்புவுக்கு ஆதரவாக முன் வைக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி முதல் 3 நாட்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடக்கிறது. அதன்பிறகு புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகம் உள்பட 6 மாநிலங்களுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து