திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று (26.10.2017) ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அருகில் உள்ள பூமாலை வணிகவளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற (25.10.2017) பாரம்பரிய உணவு திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
துவக்கி வைத்தனர்
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ரத்தினவேல், ப.குமார், ஆர்.பி.மருதராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.சந்திரசேகர், எம்.பரமேஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டனர். பாரம்பரிய உணவு திருவிழாவை தொடங்கி வைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: திருச்சிராப்பள்ளியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று 26.10.2017 ஜி கார்னர் மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அங்கமாக நேற்று (25.10.2017) திருச்சி மாநகராட்சி அருகில் உள்ள பூமாலை வணிகவளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டது. நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது கடைபிடித்த உணவுப்பழக்கமே. உண்ட உணவே மருந்தாகவும் இருந்ததால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுகளை பயன்படுத்தியதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தேகபலத்துடன் வாழ்ந்தனர். ஆனால் நவீன காலத்தில் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளையும், பதப்படுத்தியும் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனி வகைகளையும் உண்பதால் இவ்வுணவுகளில் சேர்க்கப்பட்டுள்ள அதிக அளவிலான இரசாயன கலவைகள் செயற்கையான இனிப்பு, கொழுப்பு போன்றவற்றால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஒரு காலத்தில் அரிசி பயன்படுத்த வசதி இல்லாத ஏழை எளிய மக்களின் உணவாக விளங்கியது இந்த சிறு தானியங்கள் தான். சிறு தானியங்களில் இரும்புசத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, புரதம், தாது உப்புக்கள், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. பல்வேறு மருத்துவ குணம் கொண்ட சிறுதானியங்களை சமைத்து உண்டு வந்திருந்தால் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகமல் நாம் இருந்திருக்கலாம். ஆனால் நாம் இவற்றை மறந்து போனதால் ஆரோக்கியத்தை இழந்துவிட்டோம். இனியாவது நாம் இவற்றை உணவாக பயன்டுத்த வேண்டும். இக்கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் இவ்விழாவில் சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நமது பாரம்பரிய உணவு வகைகளை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் பாபு, திட்ட அலுவலர்(ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்) புவனேஸ்வரி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், மகாலெட்சுமி, முஸ்தபா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.