முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறுமை வாழ்க்கையில் மிக மிக அவசியம்

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ பொறுமை கடலினும் பெரிது’ என்றெல்லாம் மக்கள் பேசுவதைக் கேட்கிறோம். பொறுமையில் சிறந்த தருமரை மகாபாரதம் போற்றிப்பேசுகிறது.

அவசரப்பட்டு ஒரு காரியம் செய்து அதன் விளைவு விபரீதமாகி விடும் போது, “அவ்வளவு அவசரம் ஏன்? பொறுமையாகச் செய்திருக்கலாம் அல்லவா?” என்று பெரியவர்கள் குறைபடுவதைக் காண்கிறோம்.

பெரியவர்கள் நமக்காக ஒன்றைச் செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, அதில் தாமதம் ஏற்பட்டால், சிறியவர்களால் பொறுமையுடன் இருக்க முடியாது. மாறாக, பெரியவர்கள் மீது கோபமும் ஆத்திரமும் தான் உண்டாகும். ஆனால் அவசரத்தால் விளைந்த பாதிப்புகளை அனுபவித்தவர்களுக்குத்தான் பொறுமையின் அருமை தெரியும்.

அவசரப்பட்டு செய்யும் காரியத்தில் உணர்ச்சி வேகம் இருக்குமே தவிர, அறிவுத்திறனுக்கு அங்கே வேலை இருக்காது. திட்டமிடலும் நிதானமும் இல்லாத செயல் தோல்வியைத்தான் தரும். காரணம், அதில் தவறுகள் நேரும் வாய்ப்புகள் அதிகம். பொருள் விரயம் ஏற்படும்.

என் நண்பர் ஒருவர் இடம் வாங்கி வீடு கட்டுவதில் தீவிர அவசரத்தில் இருந்தார். பத்து லட்சம் கொடுத்து ஒரு காலிமனை வாங்கினார். உண்மையில் அதன் மதிப்பு ஐந்து லட்சம் தான். பத்து லட்சம் விலை சொன்னால் தான் வாங்கு பவர் ஏழு லட்சத்திற்கு வருவார் என்று தான் அந்த வியாபாரி பத்து லட்சம் என்று விலை சொன்னார். நண்பரோ அவசரத்தில் பத்து லட்சம் கொடுத்து வாங்கிவிட்டார். பிறகுதான் அதே லே-அவுட்டில் அதே வியாபாரி, அதே அளவு விஸ்தீரணம் கொண்ட இடத்தை நண்பர் இடம் வாங்கியதற்கு முன்பும், பின்பும் குறைந்த விலைக்கு விற்றுக்கொண்டிருக்கிறார் என்கிற உண்மை தெரியவந்தது.

அவர் இடம் வாங்குவதில் பொறுமை காட்டியிருந்தால் அக்கம் பக்கத்தில் விலை விசாரித்திருப்பார். உண்மை விலை தெரியவந்திருக்கும். இவருக்கு ஐந்து லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்காது.

பொறுமையாகச் செயல்படும் காலத்தில், திட்டமிட்டு வேலையை அமைத்துக் கொள்கிறீர்கள். நல்ல பொருட்களை உரிய காலத்தில் வாங்கி சேமித்துக் கொள் கிறீர்கள். வேலையைத் தொடங்கும்போது, திறமையைத் தேடிப்பெற்று, நல்ல முறையில் முடித்துகொள்கிறீர்கள். வேலையின்போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டா லும், அது சிறிய தவறாகத்தான் இருக்கும். அதன் பாதிப்பும் அதிகம் இருக்காது. தவறைத் திருத்திக்கொள்ளவும் முடியும்.

பொதுவாக ஆண்கள் செய்யும் பல ஆடம்பரச் செலவுகள் மனைவியின் விருப்பத்தை உத்தேசித்தே இருக்கும். மனைவியோ, பக்கத்து வீட்டுக்காரி வாங்கியிருக்கிறாள் என்பதற்காக, தானும் வாங்க வேண்டும் என்று விரும்புவாள். பட்டுப் புடவை, தங்க வளையல், தங்க நெக்லஸ், வைரமூக்குத்தி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்றவை மனைவியின் விருப்பத்திற்காக கணவன் வாங்கும் பொருட்களே.

எந்த ஒரு முதலீட்டின் மூலமும் வருமானம் வரவேண்டும். அதுவே சரியான முதலீடு ஆகும். தங்க நகைகளை வாங்கி, பெட்டிக்குள் வைத்துக்கொள்வதால் அதில் போட்ட முதலீடு, வருமானம் அற்ற முதலீடு. இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் தங்கம் வாங்கியபோது உள்ள விலையை விட, இப்போது தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறதே… இப்போது நான் அந்தத் தங்கத்தை விற்றால் லாபம்தானே? என்று கேட்கலாம்.

ஆனால் லாபம் கிடைக்கும் என்பதற்காக வாங்கிய தங்கத்தை விற்று விடுவீர் களா? மாட்டீர்கள். வேண்டுமானால், அவசரப் பணத்தேவைக்கு அதைக்கொண்டு போய் அடகுவைத்து பணம்பெறலாம். அந்தப் பணத்திற்கும் நீங்கள் வட்டி கட்டியாக வேண்டும். மீண்டும் அந்த நகையை மீட்க உங்களிடம் பணம் வரும் வரை நீங்கள் வட்டி கட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

பட்டுப்புடவைகளில் போட்ட பணம் இன்னமும் பயனற்ற செலவு. அந்தப் புடவையை நம் மனைவி எங்காவது திருமண நிகழ்ச்சிக்கு கட்டிக்கொண்டு செல்வாள். அது ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பயன்படும்; அவ்வளவு தான். மற்ற நாளெல்லாம் அது பெட்டியினுள் தூங்கும். அதே பணம் வங்கியில் இருந்தால் வளரும்.

பொதுவாக பணக்காரர்கள் காசு விஷயத்தில் சிக்கனமாக இருப்பதைப்போல், நடுத்தர வர்க்கத்தினர் இருப்பதில்லை. அதனால்தான் செல்வந்தர்கள் செல்வந்தர் களாக இருக்கிறார்கள் ; அல்லது மேலும் செல்வந்தர்களாகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரோ, சற்று பணம் வந்ததும் தாங்கள் கீழ்நிலை நடுத்தர வர்க்கத்தை விட சற்றே மேலே உயர்ந்து மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினர் போல் தங்களைக் காட்டிக்கொள்வார்கள். இது அவர்களின் தாழ்வு மனப்பான்மை யின் வெளிப்பாடு.

பணக்காரர் வீடுகளை விட நடுத்தர மக்களின் வீடுகளில்தான் உயர்ரக நாய் வளர்க்கிறார்கள். அதற்கு செலவு செய்கிறார்கள். மீன் தொட்டிகளில் விதவிதமான மீன் வளர்க்கிறார்கள். அதற்கு செலவு செய்கிறார்கள். விதவிதமான குரோட்டன்ஸ் செடிகள் வளர்க்கிறார்கள். அதற்கு செலவிடுகிறார்கள்.

இந்த ஆடம்பரம் எல்லாம் எதற்கு? தங்கள் வீட்டுக்கு வரும் அவர்களைச் சார்ந்த நடுத்தர குடும்பத்தினர் இவர்களை உயர்வாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக. ஆனால் ஒரு பணக்காரனுக்கு தாழ்வு மனப்பான்மை இருப்பதில்லை. அவன் ஒவ்வொன்றையும் அவசியத்தின் பேரிலேயே வைத்துக்கொண்டிருக்கிறான். அவசியத்தின் பேரிலேயே அதற்கு செலவு செய்கிறான். அவன் செலவிடுகிற ஒவ்வொரு பைசாவும் அவனுக்கு வேறொரு பைசாவை சம்பாதித்துத் தருவதாகவே இருக்கும்.

நேரு விருந்துக்கு அழைக்கப்பட்டார். அரசாங்க அதிகாரிகள் அரசு செலவில் ஏற்பாடு செய்திருந்த விருந்து அது. நேரு வந்தார்;  பார்த்தார். பெரிய மேஜை முழுவதும் ஏகப்பட்ட பலகாரங்கள் ;  பழங்கள் ;  பிஸ்கட்டுகள் ;  கேக்குகள் என்று சுமார் நூறு பேர் சாப்பிடத்தக்க உணவுகள் அந்த மேஜை முழுவதும் நிறைத்து வைக்கப்பட்டிருந்தன.

உண்மையில் நேருவும், அவரோடு விருந்துண்ணப் போகும் அதிகாரிகளும் ஒரு நாலைந்து பேர்தான். ஆனால் விருந்துக்குத் தருவிக்கப்பட்டிருந்த உணவு வகைகளோ எக்கச்சக்கம்.

நேரு கோபத்துடன், பக்கத்திலிருந்த அதிகாரியிடம், “என்னய்யா! நான் என்ன கடோத்கஜனா, இவ்வளவு உணவையும் உண்பதற்கு? எதற்காக எனக்கு இத்தனை வகை உணவுகளை வரவழைத்து, பொருள் விரயம் செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதிகாரி, நேருவின் காதோடு காதாக சொன்னார்; 

“இல்லை. இத்தனை வகை உணவுகளும் உங்களுக்காகவும் எனக்காகவும் தருவிக்கப்படவில்லை. இங்குள்ள அரசு ஊழியர்கள் இந்த வகை உணவுகளை எல்லாம் வாங்கிச் சாப்பிட வசதி இல்லாதவர்கள்.

எனவே, உங்களுக்காக வரவழைப்பதுபோல், அரசாங்க செலவில் தங்களுக்கு வரவழைத்திருக்கிறார்கள். நாம் சாப்பிட்டு விட்டு கிளம்பிய பிறகு, இங்குள்ள மிச்சத்தை எல்லாம் அவர்கள் சாப்பிட்டு மகிழ்வார்கள் அவ்வளவுதான்” என்றார்.

நேரு, புன்சிரிப்போடு தலையசைத்துக் கொண்டார். அதாவது நேரு கோபப் பட்டது, உண்மை அறியாமல், உண்மை அறிய வந்தபோது, அவருக்கே, ஏழ்மைப் பட்ட அரசு ஊழியகள் மீது பரிதாபம் வந்துவிட்டது.

நம் வீட்டிலேயே சிலர் பொறுமை இழந்து பேசி விடுவார்கள். அதை நாமும் நிதானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாக, அவர்கள் நோய்வாய்ப்பட்டி ருக்கும்போதோ, பலவீனமாக இருக்கும்போதோ, இப்படி நடக்கும். அப்போது பேசு வது அவர்கள் அல்ல. அவர்களுடைய பலவீனம் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பதிலுக்கு நாம் கோபமாகப் பேசிவிட்டால், அதன் மூலம் நாம் மீண்டும் திரும்பப்பெற முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடுவோம். “அப்படி பேசாமல் இருந்திருக்கலாமே. சற்று கோபத்தை அடக்கிக்கொண்டு, வார்த்தைகளைக் கொட்டாமல் இருந்திருக்கலாமே!” என்று பின்னால் பலமுறை வருந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அப்படி வருந்துவதாலும் பயனில்லை.

பல சந்தர்ப்பங்களில் நம்மால் ஒரு காரியத்தின் விளைவுகள் பின்னால் எப்படி இருக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் பொறுமையைக் கடைபிடிப்பதே நல்லது. விரும்பத்தகாத விளைவுகள் வராமல் தடுக்கத் திட்டமிடுவதும் சாத்தியமாகும். ஆனால் பொறுமையை இழக்கும் போது அதற்கான நஷ்டத்தையும் ஏற்க நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தேவைதானா?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து